தமிழகம்

ஸ்மார்ட் கார்டு திமுகவின் மூளையில் உதித்த திட்டம்தான்: அமைச்சர் காமராஜூக்கு எ.வ.வேலு பதிலடி

செய்திப்பிரிவு

ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என்பது திமுகவின் மூளையில் உதித்த திட்டம் தான் என்று திமுக சட்டமன்ற உறுப்பினரும், உணவுத்துறை முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு கூறியுள்ளார்.

அமைச்சர் காமராஜூக்கு பதிலளிக்கும் விதமாக இன்று எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கையில், '''ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் ஏன் தாமதம்' என்று கேள்வி எழுப்பிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பதில் சொல்கிறேன் என்ற போர்வையில் உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

'ஆறாண்டு கால அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் கார்டு திட்டம் ஏன் செயல்படுத்தப்படவில்லை' என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அமைச்சர் அளித்த பதிலில் 'ஆம், வழங்கவில்லை. விரைவில் வழங்கி விடுவோம்' என்று பதிலளித்துள்ளார்.

'2013ல் ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 318 கோடி ரூபாய் நிதி என்னவாயிற்று' என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். 'நிதி இதுவரை செலவிடப்படவில்லை' என்பதையே அமைச்சரின் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஒரு கிலோ ரேஷன் அரிசியை கிலோ 3.50 ரூபாய் என்று உயர்த்திய அதிமுக அரசின் ஏழைகள் விரோதப் போக்கை முறியடித்து, திமுக தலைவர் கருணாநிதி '2 ரூபாய்க்கு அரிசி' வழங்கும் திட்டத்தை 2006 தேர்தல் அறிக்கையில் வெளியிட்டவுடன் அதை கண்மூடித்தனமாக எதிர்த்த அதிமுகவின் அமைச்சருக்கு திமுகவின் பொது விநியோக திட்டம் பற்றி குறை கூறுகிறார்.

ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நேரு ஸ்டேடியத்திற்கே கோப்புகளை வரவழைத்து 'கிலோ அரிசி 2 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும்' என்று முதல் கையெழுத்துப் போட்டவர் தலைவர் கருணாநிதி என்பதை மறந்து அமைச்சர் காமராஜ் இப்படி அர்த்தமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அண்ணாவின் பிறந்த நாளில் 'கிலோ 2 ரூபாய் என்று இருந்ததையும் ஒரு ரூபாய்' என்று 15.9.2008 அன்று உத்தரவிட்டது திமுக ஆட்சி. அரிசி வழங்கும் திட்டத்தை கழக ஆட்சியிடமிருந்து காப்பியடித்து விட்டு இன்றைக்கு ஏதோ அதிமுக ஆட்சியில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்று கதை விடுகிறார் அமைச்சர் ஆர்.காமராஜ்.

தினமும் ரேஷன் கடைகளில் பொருள் கிடைக்கவில்லை என்று போராடிக் கொண்டிருக்கும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வருகின்றன. என்ன செய்வது?

பொது விநியோகத் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக நியாய விலைக் கடைகளை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அனுமதி அளித்து, 617க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு நியாயவிலைக் கடைகளை அமைத்துக் கொடுத்தது திமுக அரசு.

மூன்றாம் பாலினத்தவருக்கு (திருநங்கைகள்) முதன் முதலில் நல வாரியம் அமைத்து, அவர்களுக்கு குடும்ப அட்டைகளும் வழங்கியது திமுக அரசு. பொது விநியோகத் திட்டத்தை சீரமைக்க சுமார் 14 லட்சத்து 28 ஆயிரம் போலி கார்டுகளை நீக்கி 23 சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு, பொது விநியோகத் திட்டத்தை தூய்மைப்படுத்தியது திமுக அரசு.

இதனால் தான் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தன்வீர் பட்டாரி,தீபக் வர்மா அடங்கிய அமர்வு, 'பொது விநியோகத் திட்டம் அனைத்து மக்களுக்கும் பயன்படுகிற வகையில் சிறப்பாக செயல்படுத்துவது எப்படி என்று தமிழகத்திடமிருந்து மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்' என்று திமுக ஆட்சியின் பொது விநியோகத் திட்டத்தை பாராட்டியதும் தி இந்து போன்ற நடுநிலை ஊடகங்களும் திமுக அரசின் சாதனைகளை பாராட்டி எழுதியதையும் இந்த நேரத்தில் அமைச்சருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

ஸ்மார்ட் கார்டு திட்டம் ஏதோ அதிமுகவின் திட்டம் என்பது போல் அமைச்சர் காமராஜ் அறிக்கை விட்டிருக்கிறார். பொது விநியோகத் திட்டம் பற்றி அரிச்சுவடி தெரியாமல் இப்படிப் பேசியிருக்கிறார். குடும்ப அட்டையின் ஐந்தாண்டு காலம் நிறைவு பெறப் போகிறது என்பதால், இனி வழங்கப்படும் கார்டுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக போலி ரேஷன் கார்டுகளை களைதல், பொது விநியோகத் திட்டத்தை முழுவதும் கணிணிமயமாக்கல், ஸ்மார்ட் கார்டு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக 2010-ல் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கன்சல்டென்ட் நியமித்து, ஆய்வு செய்ய உத்தரவிட்டது திமுக அரசு.

அந்த கன்சல்டென்ட் கொடுத்த முதற்கட்ட அறிக்கையை பெற்று அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த கட்டப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய நேரத்தில் தேர்தல் முடிந்து அதிமுக அரசு 2011ல் பதவியேற்றது. ஆகவே அமைச்சர் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என்பது கூட திமுகவின் மூளையில் உதித்த திட்டம் தான். எப்படி கழகத்தின் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அதிமுக உரிமை கொண்டாடியதோ அதே போல் இப்போது ஸ்மார்ட் கார்டு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டதும் அதிமுக என்கிறார். அதுவே முழுப்பொய் மட்டுமல்ல - இலைச் சோற்றில் முழுப் பூசணிக்காயை மறைக்க முயற்சிக்கிறார் அமைச்சர் காமராஜ்!

2011ல் பதவிக்கு வந்த அதிமுக அரசு சென்ற ஐந்து வருடமும் ஸ்மார்ட் கார்டு வழங்கவில்லை என்பதும், 2016ல் ஆட்சிக்கு வந்த பிறகும் ஸ்மார்ட் கார்டு வழங்காமல் உள்தாள் ஒட்டும் பணியை ஆறுவருடமாக செய்து கொண்டிருப்பதும் தான் ஸ்டாலின் எழுப்பிய முக்கியக் கேள்வி.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மக்களின் நெஞ்சத்தில் கனன்று கொண்டிருக்கின்ற கேள்வியை கேட்கும் உரிமை ஸ்டாலினுக்கு உண்டு. அந்த கேள்விக்கு உரிய பதிலைச் சொல்லும் பொறுப்பு அமைச்சருக்கு உண்டு.

நியாய விலைக்கடைகளுக்கு மின்னனு இயந்திரங்களை வாங்கிக் கொடுத்திருப்பதாகவும், ஆதார் எண் இணைக்கப்படுவதாகவும் இந்தப் பணிகள் எல்லாம் முடிந்தவுடன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் கூறியிருக்கும் அமைச்சர் காமராஜ், கடந்த ஆறு வருடங்களாக அதிமுக ஆட்சி என்ன செய்து கொண்டிருந்தது என்பதற்கு எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை.

திமுகவின் திட்டங்களை திருட்டுத்தனமாக சொந்தம் கொண்டாடிக் கொள்ள நினைக்கும் அதிமுகவின் அமைச்சருக்கு பதில் சொல்வதற்கு ஏதுமில்லை.

மிண்ணணு இயந்திரங்கள் கொள்முதல் செய்தது, பருப்பு கொள்முதல் செய்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதில் சொல்ல வேண்டியதிருக்கும். வாக்களித்த மக்களுக்கு உடனடியாக ஸ்மார்ட் கார்டுகளை வழங்க வேண்டிய பணிகளை விரைந்து செயல்படுத்தவும்'' என்று எ.வ.வேலு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT