தமிழகம்

ஆணுக்கு ஆண் தாலி கட்டினர்: பாவூர்சத்திரம் அருகே மதுக்கடையை அகற்றக் கோரி நூதன போராட்டம்

செய்திப்பிரிவு

பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, நேற்று 4-வது நாளாக போராட்டம் நடந்தது. ஆணுக்கு ஆண் தாலி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பாவூர்சத்திரம் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதால், அருகே திப்பணம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதனால், பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த மதுக் கடையை அகற்றக் கோரி கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, பொதுமக்கள் குற்றம்சுமத்துகின்றனர். இதனால், இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடந்த 1-ம் தேதி முதல் அப்பகுதி மக்கள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடைக்கு எதிரே பந்தல் அமைத்து தினமும் பகலில் போராட்டம் நடைபெறுகிறது. நேற்று 4-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மது குடிக்கும் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்காத சூழல் உருவாகும் என்பதை உணர்த்தும் வகையில், ஆணுக்கு ஆண் தாலி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT