கோயம்பேடு மார்க்கெட்டில் கால் சியம் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 4.5 டன் எடையுள்ள மாம்பழங்களை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து அழித்தனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள பழ மார்க்கெட்டில் சில கடை களில் மாம்பழங்கள் கால்சியம் கார்பைடு கற்கள் வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படு வதாக சென்னை மண்டல உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கோயம்பேடு சந்தை மேலாண்மை குழுவிடம் இருந்து புகார் வந்தது.
இதன்பேரில், உணவுப் பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மணிமாறன், சதா சிவம், ராஜா, கஸ்தூரி, சரண்யா ஆகி யோர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய சோதனை மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
பழ மார்க்கெட்டில் உள்ள 65 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், 45 கடைகளில் கால்சியம் கார்பைடு கற்கள் வைத்து செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அக்கடைகளில் இருந்து 4.5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் அனைத்தும் பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.
மேலும், இந்த மாம்பழத்தின் மாதிரியை கிண்டியில் உள்ள உணவு சோதனை மையத்துக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சோதனை அறிக்கையின் அடிப்படையில் கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இயற்கை முறையில் பழுத்த மாம்பழத்தை அழுத்திப் பார்த்தால் அப்பழத்தின் உள்பகுதி முழுவதும் பழுத்திருக்கும். ஆனால், செயற்கை முறையில் பழுக்க வைத்தால் பழத்தின் மேல்பக்கத்தில் மட்டும்தான் பழுத்திருக்கும். உட்புறம் பழுத்திருக்காது. எனவே பொதுமக்கள் மாம்பழம் வாங்கும்போது இவற்றை பார்த்து வாங்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.