தமிழகம்

பழைய 500, 1000 நோட்டுகளை மாற்றி தரக்கோரி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்ட மக்கள்

செய்திப்பிரிவு

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரக்கோரி சென்னையில் ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொண்டனர்.

2016 டிசம்பர் 31-ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. 2017 மார்ச் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள் வதற்காக சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கியில் நேற்று ஏராளமானோர் குவிந்தனர். ஆனால், வங்கி அதிகாரிகள் மாற்றித்தர மறுத்துவிட்டனர். இதனால், வங்கியை சிறிது நேரம் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பி விட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

வெளிநாடுவாழ் இந்தியர்கள் மட்டுமே மார்ச் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்படாது.

நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வெளிநாட்டில் இருந்த இந்தியர்கள் தங்களிடம் பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை மாற்றித் தருகிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT