தமிழகம்

3 ஆண்டுகளாக மோனோ ரயில் திட்டம் இழுபறி

எஸ்.சசிதரன்

சென்னைவாசிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மோனோ ரயில் திட்டம், அறிவிக்கப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளாகி இருக்கிறது. இதற்கான டெண்டர் விடப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணிகள் துவங்காமல் நீண்டு கொண்டு செல்வதால், புறநகர் மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

2006-ல் உருவான திட்டம்

கடந்த 2006-ம் ஆண்டில், முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 300 கி.மீ. நீளத்துக்கு, 18 வழித்தடங்களில் மோனோ ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., மோனோ ரயில் திட்டத்தினை ரத்து செய்து விட்டு, மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு முடிவெடுத்தது.

ஆனால், அதிமுக 2011-ல் ஆட்சிக்கு வந்ததும் ஆளுநர் உரையில் மோனோ ரயில் திட்டம் பற்றி மீண்டும் அறிவிப்பு வெளியானது. அந்த உரையில், மோனோ ரயில் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான செலவினமும், காலஅளவும் குறைவு என்பதாலும், அதிக நிலம் தேவைப்படாது என்பதாலும் அரசு அதனை செயல்படுத்த முன்வந்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

முதல் டெண்டர் ரத்து

இதைத் தொடர்ந்து, இந்த திட் டத்தைச் செயல்படுத்து வதற்கான நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க 2011 ஆகஸ்ட் 15 ல் ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) கோரப்பட்டன. சில சர்வதேச நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. 2011 டிசம்பரில், அந்த டெண்டரையே அரசு திடீரென ரத்து செய்தது. அது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, மோனோ ரயில் பற்றிய முக்கிய முடிவுகளை எடுத்து அரசுக்குத் தெரியப்படுத்த பல்வேறு துறைகளை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட அதிகாரிமளிக்கப்பட்ட குழுவை அரசு அமைத்தது.

2-வது இழுபறி

2012 ஜனவரியில் புதிய டெண்டர் கோரப்பட்டது. அதில், 8 நிறுவனங்கள் மனு செய்திருந்தன. அதில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு இறுதிக் கட்டத்தை, இரு நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதம் அடைந்தன. வண்டலூர்-வேளச்சேரி, பூந்தமல்லி-கிண்டி, பூந்தமல்லி-வடபழனி ஆகிய மூன்று வழித்தடங்களில் மோனோ ரயில் தடங்களை அமைக்க ரூ.8,500 கோடியிலான டெண்டரை வெல்ல தற்போது இரு நிறுவனங்கள் களத்தில் உள்ளன.

அவர்கள் டெண்டரின் இறுதிக்கட்டமாக, நிதி தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகளை அரசுக்கு ரகசியமாக அளிக்க வேண்டிய கட்டத்தில் பணிகள் உள்ளன.

இதற்கிடையே, கூட்டப்பட்டி ருக்க வேண்டிய தலைமைச் செயலாளர் தலைமையிலான அதிகாரிமளிக்கப்பட்ட குழு கூடி சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இக்குழு கூடவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அது தள்ளிப்போவதால், டெண்டர் இறுதியாவது தாமதமாகி வருகிறது. முதல்வரின் கனவுத்திட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டு காலமாகியும் டெண்டர் கட்டத்தைத் தாண்டாத நிலையில் உள்ளது. இதற்கிடையே வேளச்சேரி-மவுன்ட் இடையே 4-வது தடம் பற்றியும் அரசு பரிசீலித்து வருவதாகவும் ஒரு தகவல் உள்ளது.

மக்களின் நீண்டநாள் கனவுத் திட்டம், நனவாக மாற துரித நடவடிக்கை தேவை.

SCROLL FOR NEXT