தமிழகம்

சட்டப்பேரவையில் 60 ஆண்டுகள் நிறைவு: கருணாநிதிக்கு திருநாவுக்கரசர் வாழ்த்து

செய்திப்பிரிவு

ஒரே சின்னத்தில் 13 முறை போட்டியிட்டு 60 ஆண்டுகாலம் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''1949-ல் திமுக தொடங்கி முதல் முறையாக தேர்தல் களத்தில் 1957-ல் போட்டியிட்டதில் இருந்து தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியே இல்லாமல் வெற்றி மட்டுமே பெற்று சாதனை படைத்தவர் கருணாநிதி.

சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகளை கடந்திருக்கிற கருணாநிதி செய்த சாதனைகள் அளப்பரியது. திமுகவின் தொண்டராக நுழைந்து எழுத்தாளராக, பத்திரிகையாளராக, கதாசிரியராக, திரைப்பட வசன கர்த்தாவாக, இலக்கியவாதியாக, கவிஞராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக, ஆறு முறை முதல்வராக என பன்முகத் தன்மை கொண்ட மாபெரும் தலைவராக தமிழ் கூறும் நல்லுலகத்தால் அறியப்பட்டவர் கருணாநிதி.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் முழுநேரமும் விவாதங்களில் பங்கேற்று ஆரோக்கியமான கருத்து மோதல்களை நடத்துவதில் அவருக்கு நிகர் அவர் தான். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனமுண்டு என்று அண்ணா கூறியதற்கு சட்டப்பேரவையில் செயல் வடிவம் கொடுத்தவர் கருணாநிதி.

ஆளும் கட்சியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாள்தோறும் ஓய்வின்றி அரசியல் பணிகளை ஆற்றுவதில் இவருக்கு எவரும் முன்னொருவரில்லை.

தமிழக அரசியலை கருணாநிதி இயக்குவார், இல்லையெனில் மற்றவர்கள் இவருக்கு எதிராக இயங்குவார்கள். ஆக, தமிழக அரசியலில் நடு நாயகமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருபவர் கருணாநிதி. அரசியலில் இவரது வெற்றிக்கு காரணம் இவர் எடுக்கிற துணிச்சலான முடிவுகள் தான்.

1980 இல் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து ஜனதா கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதில் முன்னணிப் பங்கு வகித்தவர். அதேபோல, 1998 முதல் 2004 வரை மத்தியில் நடைபெற்ற மதவாத பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் சோனியா காந்தி தலைமையில் கூட்டணி அமைய வேண்டுமென்று முதல் குரல் கொடுத்தவர் கருணாநிதி. அதன் விளைவாக 2004 இல் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி.

1942 இல் எழுத்துப் பிரதியாக முரசொலியை தொடங்கி 75 ஆண்டுகள் சிறப்பாக நடத்தி பவள விழா கொண்டாடியவர் கருணாநிதி. முரசொலி நாளேட்டின் மூலம் தான் ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதை நிலைநாட்டியவர் கருணாநிதி.

அரசியல் ரீதியாக எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை புறந்தள்ளிவிட்டு அன்போடு பழகக் கூடியவராக இருந்தவர் கருணாநிதி. தனிப்பட்ட முறையில் என் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் காரணமாக எனது குடும்பத்தில் நடைபெற்ற அனைத்து திருமணங்களுக்கும் தலைமையேற்று மனதார வாழ்த்தி மகிழ்ந்தவர் கருணாநிதி.

15 வயதில் தமிழ் கொடியேந்தி அரசியலில் நுழைந்த கருணாநிதி சட்டப்பேரவையில் காலடி பதித்து 60 ஆண்டுகள் ஆகி 93 வயதில் இன்றைக்கு உடல் நலக்குறைவோடு இருப்பது நமக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. விரைவில் அவர் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உலகத்தில் நடைபெறும் சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறத்தக்க வகையில் ஒரே கட்சியில், ஒரே சின்னத்தில் 13 முறை போட்டியிட்டு 60 ஆண்டுகாலம் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய கருணாநிதி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT