தமிழகம்

செய்யூர் மின் திட்டம்: திடீர் இடைக்காலத் தடை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள மின்திட்ட பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யூர் பகுதியில் 4 ஆயிரம் மெகாவாட் திறன்கொண்ட 'அல்ட்ரா மெகா மின் திட்டம்' அமைய உள்ளது. சுமார் 24,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தத் திட்டம் 2008ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பான சுற்றுச் சூழலுக்குத் தேவையான காடுகள், நீர் வளங்கள், இயற்கை மணல்குன்றுகள் இந்தப் பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்களின் எதிர்ப்புகளை யும் மீறி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத் திடமிருந்து 'பவர் ஃபினான்ஸ் கார்ப்ப ரேஷன்'அனுமதி பெற்றது. தவறான தகவல்களின் அடிப்படையிலி இந்த அனுமதி வழங்கப்பட்டதாக கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டலத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மின்திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இத்திட்டம் தொடர்பான மற்றொரு வழக்கு நேற்று தீர்ப்பாயத்தின் முன் விசாரணைக்கு வந்தது.

தென் மண்டலத் தீர்ப்பாயத்தின் நீதிபதி சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் நாகேந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது மின்திட்டம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளபோது பணிகள் தொடங்கு வதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருப்பது தீர்ப்பாயத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

அதனையடுத்து, ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கப் பட்டது. இந்த வழக்கை அடுத்த மாதம் 15ம் தேதிக்கு தீர்ப்பாயம் ஒத்தி வைத்துள்ளது.

SCROLL FOR NEXT