தமிழகத்திலுள்ள இயற்கை மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு உருவாக்குவதற்காக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்: சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய மருத்துவ முறைக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது.
இந்திய மருத்துவ முறைகள் பல்வேறு நோய்களுக்கு எவ்வித பக்க விளைவுகளும் இன்றி, குறைந்த செலவில் நீடித்த
நிவாரணத்தை வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் நலம் பெற, பராம்பரிய சிகிச்சை முறை மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்திய மருத்துவ முறைகளை பயிலும் மாணவர்கள், நவீன அறிவியல் தொழில் நுட்பத்துடன், உயரிய தரத்தில் கல்வி பயில, இந்திய மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு இந்திய மருத்துவ கல்லூரிகளுக்கும் உள்கட்டமைப்பு மற்றும் தேவையான வசதிகளை ஏற்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை,மதுரை மாவட்டம், திருமங்கலத்திலுள்ள அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, சென்னையிலுள்ள அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரி, சென்னையிலுள்ள அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாரிலுள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, என மொத்தம் 5 கல்லூரிகளுக்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மருந்துகளின் தர நிர்ணயம், புதிய மருந்துகளுக்கான ஆய்வு முதலான பல்வேறு மருத்துவ ஆய்வுகளை இந்திய மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவமனைகளும் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திலுள்ள இந்திய மருத்துவம் போதிக்கும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக, ஒவ்வொரு கல்லூரியிலும் தனி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு ஒன்றினை உருவாக்குவதற்காக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், இம்மருத்துவத்தின் மாண்பும், பயனும் சர்வதேச மருத்துவ ஆய்வு நூல்களில் வெளியாவதுடன், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன்கள் சர்வதேச அளவிற்கு சென்றடைய வழிவகை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.