தமிழகம்

என்.எல்.சி. தொழிலாளர் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம்: வைகோ குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், பணி நிரந்தரம் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன் வைத்து, என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த மாதம் 3 ஆம் தேதியிலிருந்து, 31 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்துவிட்டது.

என்.எல்.சி. நிறுவனத்தின் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தன்மையுள்ள பணிகளை குறைந்த ஊதியத்தில் செய்து வருகிறார்கள். 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற அவர்களது கோரிக்கை நியாயமானது ஆகும்.

உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போராட்டத்தை கண்டுகொள்ளாமல், அலட்சியம் காட்டும் மத்திய - மாநில அரசுகளின் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது.

நேற்று மறியல் அறப்போர் நடத்திய 2,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டாம் நாளாக இன்றும் உண்ணாநிலை தொடர்கிறது.

தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வழங்கி வரும் முக்கிய பொதுத்துறையான என்.எல்.சி. நிறுவனத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தலையிட்டு என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT