நடப்பு ஆண்டு, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. கடந்த கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், இந்த ஆண்டு உரிய நேரத்தில் தென்மேற்குப் பருவ மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஆறுதலாக உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ளது. இதனால், அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை மரப்பாலம் பகுதியில், மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. மழையால், உதகை தாவரவியல் பூங்கா பிரதான புல்தரை சேதமடைந்தது.
இந்த ஆண்டு, பருவ மழை இயல்பான அளவு பெய்யும் என்று இந்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவன முதன்மை விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “இந்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவனம் மூலமாக, கடந்த 1965-ம் ஆண்டு முதல் 2016 வரையில் 52 ஆண்டுகளின் மழை அளவு பதிவு செய்யப்பட்டது. சராசரி மழை அளவு 1269 மி.மீ. பதிவானது. இதில், மிக குறைவாக 613.8 மி.மீ. பதிவான ஆண்டு 2016. மொத்தமாக 48 சதவீத மழை மட்டுமே பதிவானது.
இந்த 52 ஆண்டுகளில் 51 ஆண்டுகள் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 42 ஆண்டுகள் 75 சதவீதமும், 22 ஆண்டுகள் 100 சதவீதத்துக்கும் அதிமாகவும் மழை பெய்துள்ளது. 2016-ல் மட்டுமே 50 சதவீதத்துக்கும் குறைவாக மழை பெய்துள்ளது.
பல ஆண்டுகளில் தென்மேற்குப் பருவ மழை பொய்த்ததால், வடகிழக்கு பருவ மழை அதிகமாக பெய்யும், அல்லது கோடை மழை அதிகமாக பெய்யும். 2016-ம் ஆண்டில் மட்டுமே தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் கோடை மழை பொய்த்து, கடும் வறட்சி நிலவியது.
இந்த ஆண்டு கோடை மழை 334.8 மி.மீ. (25%) பெய்துள்ளது. தென்மேற்குப் பருவ மழை இயல்பான அளவு பெய்யும். அதேசமயம், சராசரியைவிட வடகிழக்கு பருவ மழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.