ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சென்னை நடுக்குப்பம் பகுதியில் காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
6 நாள்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தின் நிறைவு நாளில் திட்டமிட்டே காவல்துறையினர் வன்முறையை அரங்கேற்றியுள்ளனர். காவல் துறையினரின் தடியடிக்கு பயந்து நடுக்குப்பம் உள்ளிட்ட கடலோர மீனவக் குடியிருப்புகளில் மாண வர்களும், இளைஞர்களும் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் அப் பகுதி மக்களை காவல் துறை யினர் கடுமையாக தாக்கியுள்ள னர். அவர்களது வீடுகள், பொருட் களை அடித்து நாசமாக்கியுள்ள னர். ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை எரித்துள்ளனர். பெண்கள், முதியோர்கள், குழந்தைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.
நூற்றுக்கணக்கானோரை கைது செய்ததோடு அவர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஆனால், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜ், போராட்டத் தில் தேச விரோதிகளும், சமூக விரோதிகளும் ஊடுருவிவிட்ட தாக திசை திருப்புகிறார். ஆட்டோக்களுக்கும், குடிசை களுக்கும் காவல் துறையினரே தீ வைக்கும் காட்சிகள் வெளி யாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காவல் துறையினரின் அரா ஜகத்துக்கு துணைபோகும் வகையில் அவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்துள்ளார். தேச விரோதிகள் ஊடுருவியதால் வன்முறை ஏற்பட்டதாக முதல்வர் பேசியிருக்கிறார். இது கடும் கண்டனத்துக்குரியது.
நடுக்குப்பம் மீனவர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைகளை தடுக்கத் தவறிய, போராட்டத்தை திசைதிருப்பும் வகையில் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். காவல் துறையினர் நடத்திய தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.