தமிழகம்

கட்சியும், சின்னமும் உள்ள இடத்தில் நிற்போம்: அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் பேச்சு - நிர்வாகிகள் முகத்தில் நிலவிய இறுக்கம்

செய்திப்பிரிவு

சின்னமும், கட்சியும் யாரிடம் உள்ளதோ அவருக்கு துணையாக இருந்து தருமபுரி மாவட்ட அதிமுக செயல்படும் என தருமபுரியில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாக தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராசன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் பேசியபோது ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சிக்கும் வகையில் பேசினார். அப்போது கூட்டத்தில் நடுவில் இருந்து, ‘ஏய்..’ என்ற பலத்த எதிர்ப்புக் குரலுடன் எழுந்தார் நல்லம்பள்ளி ஒன்றிய முன்னாள் செயலாளர் பூங்காவனம். தொடர்ந்து அவர் ஆவேசமாக மேடையை நோக்கி நடக்க, சிலர் அவரை சமாதானம் செய்தனர்.

தொடர்ந்து, பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினரும், மாவட்ட செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் பேசியது:

இரட்டை இலையையும், அதிமுக எனும் மாபெரும் கட்சியையும் இழந்து விடக் கூடாது. எதிரிகள் யாரும் இந்த இயக்கத்தை முடக்கி விடக் கூடாது என்பதற்காகத் தான் கடும் முயற்சி செய்து கட்சி காக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவி சுகம் அனுபவித்து, அதை விட மனமில்லாத பன்னீர்செல்வம், இனி தன்னைத் தவிர யாரும் முதல்வர் இருக்கையில் அமரக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தாலேயே கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். ஆனாலும், தமிழகத்தில் ஜெயலலிதா விரும்பிய ஆட்சி தொடர்கிறது.

புதிதாக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி 5 முக்கிய நலத்திட்டங்களை நிறைவேற்ற கையெழுத்திட்டுள்ளார். முன்பொரு முறை அதிமுக-வில் பிரச்சினை ஏற்பட்டு ஜெ அணி உருவானபோது சேவல் சின்னத்தின் பக்கம் உறுதியாக நின்றவர் பழனிசாமி. அதனாலேயே கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அவரை முதல்வர் ஆக்கியுள்ளார்.

எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியும், சின்னமும் உள்ள இடத்தில் நாம் நிற்போம். எதிரிகள் பல ஆலோசனைகளை தந்தாலும் அதை நாம் கண்டுகொள்ளக் கூடாது. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலின்போது ஒற்றுமையாக செயல்பட்டு அதிமுக-வின் பலத்தை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அரூர் சட்டப் பேரவை உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதே நேரம் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர் இறுக்கமான முகத்துடன் கூட்டத்தை கவனித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT