ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம், கூத்தாநல்லூர், கயத்தார், சிங்கம்புணரி ஆகிய 5 புதிய வட்டங்களை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மக்களை நாடி எனது அரசு என்பது அதிமுக அரசின் கொள்கையாகும். வருவாய்த் துறையின் சேவைகள் மக்களுக்கு அதிவிரைவாக கிடைத்திடும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் 9 புதிய கோட்டங்களும், 65 புதிய வட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்தைப் பிரித்து ஸ்ரீமுஷ்ணம், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தைப் பிரித்து ஆண்டிமடம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தைப் பிரித்து கூத்தாநல்லூர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் வட்டங்களைச் சீரமைத்து கயத்தார், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தைப் பிரித்து சிங்கம்புணரி ஆகிய இடங்களில் 5 புதிய வட்டங்கள் உருவாக்க உத்தரவிட்டுள்ளேன். இதற்காக ரூ. 4 கோடி செலவு ஏற்படும்.
இதன் மூலம் வருவாய்த் துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவம், திறம்படவும் கிடைக்க வழி ஏற்படும்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.