தமிழகம்

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் அன்றாடம் பணிகளை நிர்வகிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமனை நிர்வாகியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக டாக்டர் டி.சடகோபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஜூன் 19-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. எனவே, மருத்துவ கவுன்சிலை நிர்வகிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நிர்வாகியாக நியமிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எம்.துரைசாமி விசாரித்தார். அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி எம்.துரைசாமி நேற்று பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை நிர்வகிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமிக்கப்படுகிறார். இவர், மருத்துவக் கவுன்சிலின் வரவு செலவு கணக்கையும், வங்கி பணப் பரிவர்த்தனை தொடர்பான பணிகளையும் மேற்கொள்ளலாம். காசோலைகளிலும், மருத்துவக் கவுன்சில் வழங்கும் சான்றிதழ்களிலும் கையெழுத்திடலாம்.

மேலும், மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர் தேர்தலை விரைவாக நடத்துவதற்கும் நீதிபதி வெங்கட்ராமன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT