தமிழகம்

கொல்லத் துடிக்கும் கொள்முதல் விலை

என்.சுவாமிநாதன்

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பது பழமொழி. அது இன்று நெஞ்சில் அறையும் நிஜமொழியாகவே மாறி வருவதுதான் வேதனை. பொதுவாக ஒரு பொருளைத் தயாரிக்கும் நிறுவனம்தான் அந்த பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்கிறது. ஆனால் வேளாண் துறையில் மட்டும்தான் விவசாயி பாடுபட்டு உற்பத்தி செய்யும் நெல்லுக்கான விலையை அரசு நிர்ணயிக்கிறது.

நடப்பு பருவத்துக்கான நெல் கொள்முதல் விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது வெறும் 70 ரூபாய் மட்டுமே உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. இதனுடன் தமிழக அரசின் பங்களிப்பாக சாதாரண நெல்லுக்கு குவிண்டாலுக்கு 50 ரூபாய் அதிகமாகவும், சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 70 ரூபாய் கூடுதலாகவும் வழங்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர். உற்பத்தி செலவையும், கொள்முதல் விலையையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வறண்டு போன நீர் பிடிப்புகளையும் நிறைக்கும் அளவுக்கு கண்ணீர் சிந்துகிறார்கள் விவசாயிகள்.

சாகுபடி பரப்பு குறைந்தது

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் விவசாயத்தில் நஷ்டம் அடைந்து பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். ‘நெல்லுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காமல் பலரும் விவசாயத்தை விட்டே வெளியேறி விட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறுகிறார் கிரியேட் அமைப்பை சேர்ந்த பொன்னம்பலம். "தமிழகத்தில் கடந்த 2000-ஆவது ஆண்டில் 22 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் சாகுபடி பரப்பு, 2010 கணக்கெடுப்பின் படி 20 லட்சம் ஹெக்டேராக சுருங்கி போய்விட்டது. 2001-ல் தமிழகத்தின் மக்கள் தொகை 6.27 கோடியாக இருந்தது. 2010-ல் 7.25 கோடியாக உயர்ந்திருக்கிறது. மக்கள் தொகை ஒரு கோடி வரை கூடியிருக்கும் நிலையில், நெல் உற்பத்தி பரப்பு குறைந்திருப்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது" என்கிறார்.

நமது நெல்லை காப்போம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தட்டிமேடு ஜெயராமன் கூறும்போது, "கடந்த ஓராண்டில் மட்டும் டீசல் விலை 7 முறை கூடியிருக்கிறது. விவசாயத்தை இன்று இயந்திர மயமாக்கிவிட்டார்கள். யூரியா, பொட்டாஷ், சின்சல்பைட் என அத்தனை உரங்களின் விலையும் உச்சத்துக்கு போய்விட்டது. விவசாய வேலைக்கு ஆள்களின் பற்றாக்குறை ஒரு பக்கம் இருக்க, விவசாயக் கூலியும் அதிகரித்து விட்டது. இத்தனை இடியாப்ப சிக்கலில் சிக்கிதான் விவசாயி நெல்லை அறுவடை செய்கிறான். ஆனால் மத்திய அரசு நெல்லுக்குக் கட்டுப்படியான விலையை நிர்ணயிக்கவில்லை.

எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் இன்றுவரை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1500 வரைகூட கிடைக்காத நிலைதான் இருக்கிறது. அரசு கொள்முதல் விலையைக் கூட்டுவது மட்டுமே இனி இந்திய விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி. அரசு கொள்முதல் மையங்களையும் டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தியே திறக்கிறது. இதனால் இடைத்தரகர்கள் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் குறைவான விலைக்கு நெல்லை வாங்கி, காவிரி பாசனப் பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்று விடுகிறார்கள். டெல்டா பகுதிகளில் இப்போது ஒரு போகம்தான் நடக்கிறது. சிறு, குறு விவசாயி 6 மாதங்கள் வயலில் மாடாக உழைத்தால் வெறும் ரூ.5000-தான் வருமானம் வருகிறது" என்கிறார்.

இதுவரை நெல் கொள்முதல் இல்லை

கன்னியாகுமரி மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினரும், முன்னோடி நெல் விவசாயியுமான செண்பகசேகரன் கூறும்போது, "தமிழக அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிகம். ஆனால் இங்குள்ள விவசாயிகளிடமிருந்து அரசு இதுவரை ஒரு கிலோ நெல்லைகூட கொள்முதல் செய்தது கிடையாது.

குமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடிவாரப் பகுதி. ஆண்டுக்கு இரண்டு காலம் மழை பெய்வதால், குமரி மாவட்டத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இங்குள்ள வேளாண் அதிகாரிகளுக்கும் இது தெரியும். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள ஈரப்பதம் இல்லை என்று சொல்லி அரசு கொள்முதல் செய்வதில்லை. பல்கலைக்கழகம் பரிந்துரைத்தபடிதான் விவசாயம் செய்கிறோம். இதெல்லாம் கடைசியில் வியாபாரிகளுக்கு சாதகமாகி விடுகிறது. வியாபாரிகள் அவர்களுக்குள் சிண்டிகேட் அமைத்து விலையைக் குறைத்து விடுகிறார்கள். வியாபாரிகள் குமரி மாவட்டத்தில் குவிண்டாலுக்கு ரூ.1200-தான் கொடுக்கிறார்கள். அறுவடை அதிகமாக ஆகியிருப்பதால் இந்த போகத்தில் வியாபாரிகள் குவிண்டால் விலையை ரூ.1000-க்கு கொண்டுவரும் அபாயமும் இருக்கிறது" என்றார்.

வயல் தயாரிப்பில் தொடங்கும் விவசாயியின் பயணம் அடித்தள உரமிடுதல், நடவு செய்தல், களையெடுத்தல், நீர் நிர்வாகம், உரமிடுதல், வேலையாட்கள் கூலி, அறுவடை, போக்குவரத்து செலவினங்கள் என தொடர்ச்சியான செயல்பாடுகளில்தான் நிறைவடைகிறது. இதற்கெல்லாம் வாங்கிய கடனுக்கு வட்டியோடு சேர்த்து அடைத்து விட்டு அடுத்த விதைப்புக்கு கடன் வாங்க காத்திருக்கும் விவசாயியை மனதளவில் கொன்று கொண்டு இருக்கிறது இந்த ஆண்டுக்கான கொள்முதல் விலை நிர்ணயம்.

SCROLL FOR NEXT