அந்தமான் படகு விபத்தில் உயிரிழந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 14 பேரின் உடல்களுக்கும் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
காஞ்சிபுரத்தில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலாச் சென்ற 32 பேரில் 17 பேர், அங்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்தனர். இதில் சுரேஷ் ஷாவின் உடல் கிடைக்கவில்லை. கிடைத்த 16 பேரின் உடல்கள் திங்கள்கிழமை அந்தமானில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. இறந்தவர்களில் 2 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் உடல்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 14 உடல்கள் காஞ்சிபுரத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டன. இந்த உடல்களுக்கு தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தி, இறந்தோரின் குடும்பத்தாரிடம் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினர். சுரேஷ் ஷாவின் உடல் கிடைக்காத நிலையில் அவருக்கான நிவாரணம் மட்டும், அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்படவில்லை.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஸ்வநாதன், கட்சியின் மாவட்டத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் இறந்தோரின் வீடுகளுக்குச் சென்று, உடல்களுக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர். இறந்தோரின் பிரிவால் வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு ஜி.கே.வாசன் ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ’’அந்தமானுக்கு சுற்றுலாச் சென்று, அங்கு ஏற்பட்ட படகு விபத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த விபத்துக்கான காரணங்களை முழுமையாக அறிய, நீதி விசாரணைக்கு அந்தமான் யூனியன் பிரதேச அரசு உத்தரவிட்டிருக்கிறது. விபத்துக்கு காரணம் அதிக பாரமா, பாதுகாப்பு கவசங்கள் இல்லாததா அல்லது அதை பயணிகள் பயன்படுத்தவில்லையா, படகு இயக்க தகுதியற்று இருந்ததா என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கெல்லாம் விடை, விசாரணை நீதிபதி அளிக்கும் அறிக்கையில் கிடைக்கும் என்று நம்புகிறேன். இனி இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்குமாறு மத்திய அரசு சார்பில் அந்தமான் யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
தலைவர்கள் அஞ்சலி:
காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க செயலாளர் தா.மோ.அன்பரசன், ம.தி.மு.க துணைப்.பொதுச்செயலர் மல்லை சத்தியா, மாவட்ட பா.ம.க தலைவர் சங்கர் உள்ளிட்டோரும் இறந்தோர் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.