அந்தமான் நிக்கோபர் அருகே ‘ஹுத் ஹுத்’ என்ற புயல் உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் நிக்கோபர் தீவு அருகே திங்கள்கிழமை ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருந்தது. இது நேற்று முன் தினம் இரவு மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று காலை முதல் புயலாக உருவெடுத்துள்ளது.
இதற்கு ‘ஹுத் ஹுத்’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டங்களில் மிகவும் நீளமான லாங் ஐலேண்டு தீவில் மையம் கொண்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, ''அந்தமான் நிகோபார் பகுதியில் தற்போது ‘ஹுத் ஹுத்’ என்ற புயல் உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகரும். பின்னர் வரும் 12-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸா மாநிலம் கோபால்பூர் அருகே கரையைக் கடக்கும். இந்த புயலால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது'' என்றார்.
தமிழகத்தில் மழை
ஆந்திர மாநிலம் அருகே மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் இருந்த காற்றழுத்த சுழற்சி நேற்று தெற்கு வங்கக் கடல் ஆந்திரப் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.
புயல் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல எந்த எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை.
“புதியதாக புயல் உருவாகியுள்ளதால் தென் மேற்கு பருவ மழை மேலும் ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும். தமிழகத்தின் மழை தேவையை பூர்த்தி செய்யும் வடகிழக்கு பருவ மழை அதன் பிறகே முடிவு செய்யப்படும். தற்போது வடகிழக்கு பருவ மழையின் அறிகுறியாக இருக்கும் மேற்கு திசை காற்று வீச தொடங்கியுள்ளது. பின்னர் இது கிழக்கு காற்றாக மாறும்போது வடகிழக்கு பருவ மழை குறித்து அறிவிக்கப்படும்” என வானிலை மைய இயக்குநர் ரமணன் கூறினார்.