தமிழகம்

தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு 3 கிலோ தங்கம் கடத்திய 4 பேர் கைது

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலம் ராஜமுந்திரி யிலிருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு தனியார் சொகுசு பஸ்ஸில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னையில் செயல்படும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்பி அருண்குமார், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சனுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 3 மணி முதல் அருண்குமார் மற்றும் பொன்னேரி டிஎஸ்பி மாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீஸார், இரு குழுக்களாக கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா- தமிழக எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த வாகன சோதனையின் போது, காலை 6 மணி அளவில், ஆந்திர பகுதியிலிருந்து, சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் ஒன்றை போலீஸார் சோதனை செய்தனர்.

அப்போது, தெலங்கானா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த அந்த தனியார் சொகுசு பஸ்ஸில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த 4 இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இளைஞர்களின் பைகளை முழுமையாக சோதனை செய்தனர். இதில், துணிகள் மற்றும் காய்கறிகளின் அடியில் 20 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 4 பேரையும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர் போலீஸார். அந்த விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு: சென்னை - மயிலாப் பூரை சேர்ந்த காஜாநஜிமுதீன்(42), சகாபுதீன்(38), ஜமாலுதீன்(30), முகமது இக்பால்(35) ஆகிய அந்த 4 பேரும் கூலிக்காக தங்க கட்டிகளை தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு கடத்தியது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து, தலா 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த எடை 3 கிலோ 360 கிராம் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT