சேலம் - நாமக்கல் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலங்களில் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டி களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக புகார் எழுந்துள்ளது.
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை 49.425 கி.மீ. தூரம் கொண்டது. இச்சாலை கடந்த 2008-ம் ஆண்டு நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. சாலையில் வாகனப் போக்குவரத்திற்கு வசதியாக பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சேலம் சீலநாயக்கன் பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், அத்தனூர், ஆண்டகளூர்கேட், புதுச்சத்திரம், புதன்சந்தை, நாமக்கல் முதலைப்பட்டி ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர, சிறு பாலங்களும் சில இடங்களில் அமைந்துள்ளன.
தென்மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலை என்பதால் இந்த வழியாக தினமும் அரசு, தனியார் பேருந்து, லாரி என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் மேம்பாலங்களில் மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் மேம்பாலம் வழியாக வாகனங்களில் பயணிப்பது பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்துகிறது என வாகன ஓட்டிகள் புகார் தெரிகின்றனர். குறிப்பாக விபத்து மற்றும் திருட்டு அபாயத்தை ஏற்படுத்துவதாக இரு சக்கர வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேம்பாலங் களில் மின் விளக்கு அல்லது சூரிய ஒளியால் இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய விளக்குகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.