தமிழகம்

வேந்தர் மூவீஸ் மதன் மாயமானது குறித்து போலீஸ் நாளைக்குள் பதிலளிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

வேந்தர் மூவீஸ் நிர்வாகியும், திரைப்பட விநியோகஸ்தருமான மதன், கடந்த மே 27-ம் தேதி திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. மகனை கண்டுபிடித்து தரக்கோரி மதனின் தாயார் தங்கம், முதல் மனைவி சிந்து, 2-வது மனைவி சுமலதா ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர்.

அதேநேரத்தில், ரூ.200 கோடி பணத்துடன் மதன் மாயமாகி விட்டதாக எஸ்ஆர்எம் கல்விக் குழுமமும், மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக கூறி மதன் ஏமாற்றி விட்டதாக 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் மாணவர்களும் தனித்தனியாக போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே, மதனின் தாயார் ஆர்.எஸ். தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘எனது மகன் மதன் கடந்த மே 27-ம் தேதி டெல்லி சென்றார். மறுநாள் போனில் தொடர்புகொண்டு 29-ல் சென்னை வருவதாக கூறினார். ஆனால், 29-ம் தேதி வரவில்லை. எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்த ருடன் ஏற்பட்ட பணப் பிரச்சினை யால், காசிக்கு சென்று கங்கையில் சமாதி அடைகிறேன் என தனது லெட்டர்பேடில் எழுதி வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இது வரை எனது மகன் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. எனவே, எனது மகனை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மதன் மாயமானது தொடர்பாக மட்டுமே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார். ஆனால், மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித்தருவதாக கூறி பெரும் தொகையை பெற்று மதன் மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களது பெற்றோரும் புகார் செய்துள்ளனர். ஆனால், இந்த மோசடி குறித்து மதன் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதா, இல்லையா என்ற விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனவே மதன் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதா என்பது குறித்தும், மாயமான மதன் குறித்தும் போலீஸார் 8-ம் தேதிக்குள் (நாளைக்குள்) பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

பாரிவேந்தர் மீது சந்தேகம்

மதனின் தாயார் ஆர்.எஸ்.தங்கம், மனைவி சுமலதா மற்றும் அவர்களது வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ் ஆகியோர் கூறும்போது, ‘‘ரூ.200 கோடி பணத்துக்காக மதனுக்கு மயக்க ஊசி போட்டு எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தரே பதுக்கி வைத்துள்ளாரா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மருத்துவப் படிப்புகளுக்காக மதன் வாங்கிய பணம் முழுவதையும் அவரிடம்தான் கொடுத்துள்ளார். எனவே, மதனை போலீஸார் உயிருடன் கண்டுபிடித்து ஒப்படைத்தால்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பதால் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT