தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவை தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து வேலைநிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வேலூர், திருவண்ணாமலை நிலவரம்:
வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தின்கீழ் மொத்தம் 720 பேருந்துகள் உள்ளன. திங்கட்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 35 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை மண்டலத்தில் மதிய நிலவரப்படி 85 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
தி.மலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட சில பகுதிகளில் 7 அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் சேதமடைந்தன.
அதிமுக - திமுக நிர்வாகிகளிடையே பிரச்சினை
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அதிமுக, திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே பிரச்சினை ஏற்பட்டது.பணிமனை அருகே இருதரப்பினர் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தேனி நிலவரம்:
தேனி மாவட்டத்தில் 60 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தற்காலிக பணியாளர்களை கொண்டு சில இடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன. முதன்முறையாக ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு மினி பஸ்கள் இயக்கப்பட்டன.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி நிலவரம்:
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 40 சதவீத பேருந்துகள் மட்டும் இயங்கின. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களிலும் பலர் பணிக்கு வரவில்லை. திருநெல்வேலி, தூத்துக்குடியில் தனியார் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டன.
நாகை நிலவரம்:
நாகை மாவட்டத்தில் உள்ள 6 பணிமனைகளிலிருந்து 336 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இதில் சுமார் 90 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.நாகை,வேதாரண்யம்,மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து குறைந்த தூரத்திற்கான பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன.தனியார் பேருந்துகள்,மினி பேருந்துகள் இயங்கின.
திருவாரூர் மாவட்டத்தில் 55 சதவிகித அரசுப்பேருந்துகள் இயங்கவில்லை.
தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:
''மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களாக பணியாற்ற கனரக வாகன உரிமம், நடத்துனர் உரிமம் வைத்துள்ளவர்கள், அசல் சான்றிதழ்களுடன் அருகில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக கிளையின் மேலாளரை உடனடியாக நேரில் அணுகலாம். தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும். ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை ஏற்படின் தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர்'' என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழகம் முழுவதும் பரவலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறவிருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் வேலைநிறுத்தம் தொடரும் சூழல் உருவாகியுள்ளது. முக்கிய தொழிற்சங்க நிர்வாகிகள் வராததால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 20-ல் இருந்து 30% பேருந்துகள் மட்டுமே இயக்கம்:
இன்று (திங்கள்கிழமை) காலை தலைநகர் சென்னையில் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை தாம்பரத்தில் 2 பணிமனைகள் உள்ளன. ஒன்று மாநகரப் போக்குவரத்துப் பணிமனை. இங்கிருந்து ஒவ்வொரு நாளும் 152 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இன்று காலை வெறும் 30% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல் அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து புறப்பட வேண்டிய 51 பேருந்துகளிலும் 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
குரோம்பேட்டையில் இருந்து இயக்கப்பட வேண்டியவை 159 பேருந்துகள், ஆலந்தூரில் இருந்து இயக்கப்பட வேண்டியவை 136 பேருந்துகள், ஆதம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட வேண்டியவை 55 பேருந்துகள், செங்கல்பட்டில் இருந்து இயக்கப்பட வேண்டியவை 53 பேருந்துகள். ஆனால், ஒட்டுமொத்தமாகவே 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் போன்ற பகுதிகளில் மின்சார ரயில் சேவை மக்கள் பயன்படுத்துவதால் ஓரளவு பாதிப்பு குறைவு எனக் கூறலாம். இருப்பினும் வேளச்சேரி - பள்ளிக்கரணை, கிழக்கு தாம்பரம் - கேம்ப் ரோடு இடையே பேருந்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மக்கள் அருகில் இருக்கும் ரயில் நிலையங்களுக்குக்கூட செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கோயம்பேடு பணிமனை, சைதாப்பேட்டை பணிமனைகளில் இருந்தும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.
பேருந்து கண்ணாடி உடைப்பு:
இதற்கிடையில், சென்னை குரோம்பேட்டை பணிமனை அருகே பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ., காலனியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று (திங்கள்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் நிலவரம்:
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 431 அரசு பேருந்துகளில் 223 பேருந்துகள் ஒடவில்லை. கிட்டத்தட்ட 50% பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிறசங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவில்லை. அவர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாலும் மினி பேருந்துகள் இயக்கப்படுவதாலும் விருதுநகரில் பெரும் அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. விருதுநகர் பழைய பேருந்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின.
விருதுநகர் பஸ் டெப்போ: படம்: இ.மணிகண்டன்.
புதுச்சேரியில் கடும் பாதிப்பு:
புதுச்சேரியில் தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை, சிதம்பரம், திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், கும்பகோணம், அரக்கோணம், வேலூர் போன்ற இடங்களுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பேருந்து கழக தொழிற்சங்கத்தினர் பணிமனை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகள் | படம்: எம்.சாம்ராஜ்
தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இருப்பினும் புதுச்சேரி அரசுப் பேருந்துகள் 45 மட்டுமே என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் உப்பளம் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன.
திருப்பூரில் மக்கள் அவதி:
திருப்பூர் பேருந்து பணிமனையில் இருந்து தினமும் 200 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்று காலை வெறும் 30 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
திருப்பூர் பேருந்து நிலையம் | படம்: இரா.கார்த்திகேயன்.
இதனால், காலை நேரத்தில் பின்னலாடை நிறுவனங்கள், தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
கோவையில் 40% பேருந்துகள் இயக்கம்:
கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் முழுவீச்சில் இயங்குகின்றன. அரசுப் பேருந்துகள் 40% மட்டும் இயங்குகின்றன. அண்ணா தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்காததால் 40% பேருந்துகள் அவர்களைக் கொண்டு இயக்கப்படுகின்றன.
கோவை சுங்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசுப் பேருந்துகள் | படம்: எம்.மனோகரன்.
மதுரையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை:
மதுரையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை. மதுரை மண்டலத்தில் மொத்தம் 1200 பேருந்துகள் உள்ளன. இவற்றில் 90% பேருந்துகள் இயக்கப்படவில்லை. 5% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
ராமநாதபுரத்தில் பாதிப்பில்லை:
ஆனால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. இதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் | படம்: ஆர்.அசோக்
மதுரை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் கூடி நிற்கும் ஒட்டுனர், நடத்துனர்கள்
தனியார் பேருந்துகள், மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் பெருமளவில் இயங்காவிட்டாலும் குறைந்த அளவிலாவது இயங்குவதுபோல் காட்டிக் கொள்ளும் வகையில் பேருந்து டெப்போகளில் இருந்த பேருந்துகள் சில பேருந்து நிறுத்தங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூரில் 4 பேருந்துகள் மட்டுமே இயக்கம்:
பெரம்பலூர் அரசுப் பேருந்து பணிமனையில் ஒவ்வொரு நாளும் 110 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்று 4 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. போக்குவரத்து வேலைநிறுத்தம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் மக்கள் பயணங்களை தவிர்த்ததால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
நீலகிரியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது:
நீலகிரியில் மொத்தம் உள்ள 415 பேருந்துகளில் 25 மட்டுமே இயக்கப்பட்டன. நிலைமையை சமாளிக்க 63 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. 940 ஊழியர்களில் 252 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். 688 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 19 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கம்:
திருச்சியில் அரசு பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையிலே இயங்கின. ஓட்டுநர், நடத்துனர் சாதாரண உடையில் இருந்தனர். பயணிகள் கூட்டம் இன்றி பெரும்பாலான தனியார் பேருந்துகளும் காலியாகவே இருந்தன. பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதால் வெளியூர் செல்வதற்காக ரயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் அதிகமாக இருந்தனர்.
நிரம்பி வழிந்த திருச்சி ரயில் நிலையம் | படம்: ஜி.ஞானவேல் முருகன்.