வேளச்சேரி விபத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தை அன்பு, தேனாம்பேட்டை கருணை பிரியா அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
சென்னை வேளச்சேரி தரமணி 100 அடி சாலை பாரதி நகர் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறிய விபத்தில் ஆறுமுகம், அவரது மனைவி கர்ப்பிணி ஐஸ்வர்யா மற்றும் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் தாய், தந்தையை இழந்த ஒரு வயது குழந்தை அன்புவை போலீஸார் மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற கருணை பிரியா அறக்கட்டளையில் குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தை அன்புக்கு ஒரு வயதே ஆவதால், கருணை பிரியா அறக்கட்டளையில் ஒப்படைத்துள்ளோம். 2 வயது வரை குழந்தை அங்கேயே இருப்பான். அதன்பின் வேறு இடத்துக்கு மாற்றிவிடுவோம் என சி டபிள்யு சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தையை பராமரித்து வரும் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் கூறும்போது, “குழந்தை அன்பு, மற்ற குழந்தைகளுடன் சந்தோஷமாக விளையாடுகிறான். உணவுகளை சாப்பிடுகிறான். அடம் பிடிப்பதோ, அழுவதோ இல்லை. தாய், தந்தையை காணவில்லை என்ற உணர்வு இருந்தாலும், அதனை எப்படி வெளிக்காட்டுவது என அவனுக்கு தெரியவில்லை” என்றனர்.
பாட்டியிடம் கொடுக்க மறுப்பு
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “குழந்தையின் பாட்டி ஜெயா (70) வந்து குழந்தையை கேட்டார். அவரே பிளாட்பாரத்தில் வாழ்ந்து வருகிறார். அவரிடம் குழந்தையை கொடுத்தால், அவரால் எப்படி குழந்தையை வளர்க்க முடியும். குழந்தையின் எதிர்க்காலம் கேள்விக் குறியாகிவிடும். அதனால், குழந்தையை பாட்டியிடம் கொடுக்கவில்லை. காப்பீடு பணம் வந்ததும், குழந்தைக்கு பெயரில் வங்கி கணக்கு தொடங்கி போடப்படும். அந்த பணம், குழந்தையின் எதிர்காலத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.