தமிழகம்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது திட்டமிட்ட சதி: கருணாநிதி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேர்தலை தள்ளிவைப்பது திமுகவுக்கு எதிராக செய்யப்படுகின்ற சதியாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி நேற்றிரவு அளித்த பேட்டி:

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தல் மே 23-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. திடீரென பாமக, பாஜக வேண்டுகோளை ஏற்று இத் தொகுதிகளின் தேர்தலை 3 வாரங் களுக்கு தள்ளி வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இது வேண்டு மென்றே திமுகவுக்கு எதிராகச் செய்யப்படுகின்ற சூழ்ச்சியாகும்.

பாமக, பாஜக சார்பில் கொடுத்த வேண்டுகோள் என்றால், அவர்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெற் றிருக்கிறார்கள்? இதுபற்றி அங்கே போட்டியிடும் திமுக போன்ற கட்சி களின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டாமா? பாமகவும், பாஜகவும் கேட்டுக் கொண்டார்கள் என்று காரணம் காட்டி தேர்தல் தேதியை 3 வாரங்களுக்கு தள்ளிவைப்பது வேண்டுமென்றே திட்டமிட்டு செய் யப்படுகின்ற சதி என்று கருதுகிறேன்.

நீதிமன்றத்தில் இதற்கான ஆணையைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். நீதிமன்றத்துக்கு யார் சென்றார்கள்? எப்படிச் சென் றார்கள்? என்ற அந்த ரகசியம் எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். ஏற்கெனவே அறிவித்தபடி தேர்தல் நடக்காவிட்டால், வேண்டுமென்றே தேர்தல் தேதியை தள்ளிக்கொண்டே போவதற்காக நானே களத்தில் இறங்கி போராடுவேன்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:

எதற்காக இதுபோன்று 3 வாரங்களுக்கு தேர்தல் தேதியை தள்ளிவைக்கிறார்கள்?

விரைவில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரவுள்ளது. அதனால் இந்த 2 வாக்குகள் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடக்காமல், அதை நிறுத்த வேண்டுமென்ற ஜெயலலிதாவின் விருப்பப் படி இந்த முயற்சிகள் நடைபெறுகின்றன என்று கருதுகிறேன். தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் அடிமையாகச் செயல்படுகிறது என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.

இந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தலை நடத்த முன்வராவிட்டால்?

உடனடியாக அங்கே தேர்தல் நடத்துவது பற்றி அறிவிக்காவிட்டால் நானே களத்தில் இறங்கி அறப் போராட்டத்தை நடத்துவேன். தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்த தேதியில் அந்த 2 தொகுதிகளிலும் தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.

முன்னதாக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றனர்.

SCROLL FOR NEXT