தமிழகம்

அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவிக்கு வர முடியும்: பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து

செய்திப்பிரிவு

அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவிக்கு வர முடியும் என்று சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் ஆலோசனைக் கூட்டம், பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பொள்ளாச்சி ஜெயராமன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களை சந்தித்து வாக்கு களைப் பெற முடியாத திமுக வினர், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவர்களின் தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சமூக வலைதளங்களில் விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மக்கள் பணியை செய்து வருகின்றனர். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில்தான் தற்போது எங்களின் கவனம் உள்ளது.

திமுகவும், ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுகவின் முகத்திரை விரைவில் கிழியும் என்றார்.

டி.டி.வி.தினகரன் விரைவில் முதல்வர் ஆவார் என பேசப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பொள்ளாச்சி ஜெயராமன், “டீக்கடை நடத்தி வந்த ஓ.பன்னீர் செல்வம், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த பழனிசாமி என யார் வேண்டுமானாலும் அதிமுகவில் முதல்வர் பதவிக்கு வரமுடியும். ஆனால் திமுகவில் ஸ்டாலினை தவிர வேறு யாரும் முதல்வர் பதவிக்கு வர முடியாது என்ற நிலை உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT