மேடவாக்கத்தில் போராட்டம் நடத்திய பெண்களிடம் போலீஸார் அத்துமீறி நடந்தது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து சென்னை மேடவாக்கத்தில் உள்ள ஏடிஎம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடந்த 31-ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அதை போலீஸார் தடுக்க வந்தபோது, இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் தடியடியும் நடத்தினர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம் போலீஸார் பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்து கொண்ட தாகக் கூறப்படுகிறது.
மடிப்பாக்கம் உதவி ஆணையர் கோவிந்தராஜீ, பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் தலைமையில் வந்த போலீஸார்தான் தடியடி நடத்தி அத்துமீறி நடந்து கொண்டதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு, சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது:
போராட்டம் நடத்திய பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் நடந்ததாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதையே புகாராக எடுத்துக் கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி, அது குறித்த அறிக்கையை இன்னும் 6 வாரங்களுக்குள் மாநில மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
போலீஸாரின் அத்துமீறல்கள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், மனித உரிமை ஆணையத்தின் தலையீடு, போலீஸாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.