சென்னையில் வரும் ஜனவரி 2-ம் தேதி பா.ம.க. தலைமை பொதுக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் செயல் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறி வித்திருந்தார். இதைத் தொடர்ந்து, பாமக தலைமையில் பல்வேறு சாதி அமைப்புகளைக் கொண்ட சமூக ஜனநாயக கூட்டணியை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்தார்.
ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட ராமதாஸ் முடிவு செய்திருப்பதாகவும் கருத்து நிலவி வருகிறது. இதனால், சமூக ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமைப்புகள் மற்றும் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த சூழலில் பாமக தலைமை பொதுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 2-ம் தேதி சென்னை தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் நாடாளு மன்றத் தேர்தலுக்கான செயல் திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
பா.ம.க. நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சமூக ஜனநாயக கூட்டணியை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலுக் கான வேட்பாளர்கள் பட்டியலையும் தலைமை அறிவித்து விட்டது. அதேசமயத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் ஆலோசிக்கின்றனர். இதற்கு பதிலாக திமுக அல்லது அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலாவது பலன் கிடைக்கும். தொண்டர்களும் சுறு சுறுப்பாக தேர்தலில் பணியாற்று வார்கள். கட்சிக்கு எம்.பி.க்கள் மிகவும் முக்கியம். ஆனால், கட்சியின் தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று பொதுக்குழுவில்தான் தெரியவரும். சமூக ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற அமைப்புகளின் நிலை என்னவாகப் போகிறதோ தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.