கல்பாக்கத்தில் பெண்ணிடம் நகை பறித்த, அணு மின் நிலைய அறிவியல் அதிகாரியின் மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
கல்பாக்கம் அணுமின்நிலைய குடியிருப்பில், 4-வது அவென்யூ வில் குடியிருப்பவர் பார்த்தசாரதி. இவர் அணு மின் நிலையத்தில் ஃபோர்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி யுவராணி (48), வீட்டில் இருந்தபடி இசை பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். எப்போதும் நகைகளை அணிந்தபடிதான் காட்சியளிப்பாராம்.
அணு மின் நிலையத்தில் அறிவியல் அதிகாரியாக பணிபுரிந்து வருபவரின் மனைவி பிரேமா (40). இவர்களும் அதே அணுமின் நிலைய குடியிருப்பில் வசிக்கின்றனர். இருவரும் தோழிகள். சில தினங்களுக்கு முன்பு, தான் இசை பயில விரும்புவதாக கூறி யுவராணியிடம் பிரேமா இசை பயிற்சி எடுத்து வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர் யுவராணி வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார். கதவைத் திறந்ததும் அப்போது தயாராக வைத்திருந்த கரப்பான்பூச்சி ஸ்பிரேயை, யுவ ராணியின் முகத்தில் அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்த நிலையில் கழுத்தில் இருந்த நகைகளை பறித்தார். இதை உணர்ந்த யுவராணி நகைகளை பிடித்துக்கொண்டார்.
கையில் சிக்கிய 25 கிராம் நகையை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்ற பர்தா பெண்ணை யுவராணி கட்டிப்பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இதனால் பர்தா பெண் யுவராணியின் தலை மீது ஸ்பிரே கேனால் அடித்து தாக்கினார்.
இதனிடையே அங்கே குவிந்த பொதுமக்கள், பர்தா மூடிய முகத்தை திறந்து பார்த்தபோது, அது பிரேமா என்பது தெரியவந்தது. அவரை, கல்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.