தமிழகம்

உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா ஓய்வு: நீதிபதிகள் எண்ணிக்கை 54 ஆக குறைவு

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது.

கடந்த 1955-ம் ஆண்டு கடலூரில் பிறந்த ஆர்.மாலா பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கடலூரில் முடித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழ கத்தில் சட்டக்கல்வியை முடித்தார். 1982-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். பின்னர் 1989 ல் சார்பு நீதிபதிக்கான தேர்வில் வெற்றிபெற்று நீதிபதியாக பொறுப்பேற்றார்.

நீதித்துறையில் பல்வேறு பணிகளை வகித்த நீதிபதி மாலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவின் முதல் பெண் பதிவாளராக கடந்த 2006- ல் பொறுப்பேற்றார். 2009-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2012-ல் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 8 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மாலா, நேற்று பணி ஓய்வு பெற்றார்.

உயர் நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு பிரிவுபச்சார விழா நடந்தது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி மற்றும் அரசு வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.

நீதிபதி ஆர்.மாலா நேற்று பணி ஓய்வு பெற்றதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது. இந்த மாதம் மேலும் 2 நீதிபதிகளும், வரும் மே மாதம் மேலும் 4 நீதிபதிகளும் பணி ஓய்வு பெறவுள்ளனர்.

SCROLL FOR NEXT