வெட்டுக் காயங்களுடன் உயி ருக்கு போராடிய வாலிபரை போலீஸார் விரைந்து செயல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அவரது உயிரைக் காப் பாற்றினர். ஓட்டுநர் இல்லாததால், சமயோசிதமாக செயல்பட்டு ஆம்பு லன்ஸ் வாகனத்தை ஓட்டிச்சென்ற ஏட்டு உள்ளிட்ட போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை பூந்தமல்லியை சேர்ந் தவர் புனிதவண்ணன் (33). லாரி மூலம் கழிவுநீர் அகற்றும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில், பூந்தமல்லி டிரங்க் சாலையில் லாரியை நிறுத்திவிட்டு புனிதவண்ணன் டீ குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு 2 பைக்கில் வந்த 4 நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். தலை, மார்பு, கையில் வெட்டு விழுந்ததால், ரத்த வெள்ளத்தில் புனிதவண்ணன் விழுந்தார். கூட்டம் கூடுவதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பினர்.
அருகே இருந்தவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அம்பத்தூர் துணை ஆணையர் சுதாகர் உத்தரவுப்படி பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், எஸ்.ஐ. சத்தியமூர்த்தி, ஏட்டு பாபு ஆகியோர் விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸுக்காக காத்திருக் காமல், ஷேர் ஆட்டோவில் புனித வண்ணனை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முத லுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை மோசமான தால், அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு டாக்டர்கள் கூறினர். அந்த தனியார் மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விடுமுறையில் இருந்ததால், ஏட்டு பாபுவே ஆம்புலன்ஸை ஓட்டினார்.
பூந்தமல்லியில் இருந்து போரூர் தனியார் மருத்துவமனைக்கு 5 நிமிடத்தில் அவர் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றார். உடனடியாக புனிதவண்ணன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். துரிதமாக செயல்பட்டு அவரைக் காப்பாற்றிய ஏட்டு பாபு உள்ளிட்ட 3 போலீஸாரையும் காவல் ஆணையர் டி.கே ராஜேந்திரன் பாராட்டினார்.
ஆம்புலன்ஸை ஓட்டிய ஏட்டு பாபு கூறும்போது, ‘‘எத்தனை கி.மீ. வேகத்தில் ஓட்டினேன் என்றே தெரியவில்லை. புனிதவண்ணனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்னிடம் இருந்தது. ஓர் உயிரைக் காப்பாற்றியது நிறைவைத் தருகிறது’’ என்றார். புனிதவண்ணனின், மனைவி ஜீவிதா கூறும்போது, ‘‘உயிருக்குப் போராடிய கணவரை மீட்ட போலீஸார் என் கண்ணுக்கு கடவுளாகத் தெரிகின்றனர். அவர்களது உதவியை உயிர் உள்ள வரை மறக்கமாட்டோம்’’ என்று கண்ணீர் மல்க கூறினார்.
4 பேர் சிக்கினர்
இதற்கிடையில், புனிதவண்ணன் தாக்கப்பட்டது தொடர்பாக பூந்தமல்லி லோகேஷ், செல்வம், கிருஷ்ணமூர்த்தி என்ற கண்ணன், தண்டையார்பேட்டை ஜான் கென்னடி ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆரம்ப காலத்தில் கண்ணனிடம் புனிதவண்ணன் லாரி டிரைவராக வேலை செய்துள்ளார். இவர் சொந்த லாரி வாங்கி, அதே தொழிலையே தொடங்கியதால் கண்ணனின் வருமானம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் நண்பர்கள் உதவியுடன் கண்ணன் இத்தாக்குதலை நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.