ஏழை குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கு பாடுபடுவோருக்கு சென்னை சரஸ்வதி வித்யாலயா கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவரான கே.சரஸ்வதி நினைவாக ‘திருமதி கே.சரஸ்வதி நினைவு விருது’ வழங்கப்படுகிறது. 2016-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும், அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியும் அடையாறு ஹோட்டல் கிரவுன் பிளாஸாவில் 7-ம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
இதில், மும்பை பிரதாம் தொண்டு நிறுவனத்தின் நிறுவன அறங்காவலரான பரிதா லம்வேவுக்கு சரஸ்வதி நினைவு விருது வழங்கப்படுகிறது. விழாவுக்கு ‘தி இந்து’ நிறுவனத்தின் என்.முரளி தலைமை தாங்கி கே.சரஸ்வதி நினைவு விருதை வழங்குகிறார். தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வரும் பல் மருத்துவ நிபுணருமான டாக்டர் சி.எஸ்.பிரசாத் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இந்தத் தகவலை வடபழனி சரஸ்வதி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் தலைவர் மற்றும் முதல்வர் கே.எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருமதி கே.சரஸ்வதி நினைவு விருது பெறும் கல்வியாளரான பரிதா லம்பே மும்பை நிர்மலா நிகேதன் சமூகவியல் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் ஆவார். அவர் 1994-ம் ஆண்டு மாதவ் சவான் என்பவருடன் சேர்ந்து ‘பிரதாம்’ என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி மும்பையில் குடிசைகளில் வசிக்கும் ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார்.