கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஆகஸ்ட் 16 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஆகஸ்ட் 16 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளது. அதன்படி மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஒரு சிறப்புக் கட்டண ரயிலும், வேளாங்கண்ணியிலிருந்து பாந்த்ரா முனையத்துக்கு ஒரு சிறப்புக் கட்டண ரயிலும் இயக்கப்படும்.
மதுரை சென்னை எழும்பூர் இடையேயான சிறப்பு ரயில் ஆகஸ்ட் 16-ம் தேதி இரவு 7.45-க்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.20-க்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல், வேளாங்கண்ணி - பாந்த்ரா முனையம் இடையேயான சிறப்பு ரயில் ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 9.45 மணிக்கு வேளாங் கண்ணியிலிருந்து புறப்பட்டு ஆகஸ்ட் 31 காலை 10.40-க்கு பாந்த்ரா முனையத்தை அடையும். தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.