தமிழகம்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: 6 நாள் விரதம் தொடங்கிய பக்தர்கள் - அங்கபிரதட்சணம் செய்ய நீண்ட வரிசை

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரு வேளை உணவுடன் விரதத்தை தொடங்கினர்.

விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இதர கால பூஜைகள் நடந்தன.

யாக பூஜை

காலை 6 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் யாக சாலைக்கு ஜெயந்திநாதர் எழுந்தருளினார். அங்கு கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து, தீபாராதனை நடைபெற்றவுடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பிரகாரம் வழியாக வந்தார். அப்போது பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு போன்ற பாடல்களைப் பாட, சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்து அங்கு பக்தர்களுக்கு சுவாமி காட்சியளித்தார்.

மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரி வீதி வலம் வந்தார்.

பக்தர்கள் குவிந்தனர்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முதலே பக்தர்கள் திருச்செந்தூருக்கு வரத் தொடங்கினர். யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலும், நாழிக் கிணற்றிலும் நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர். மேலும், கோயில் கிரிபிரகாரத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.

தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலிலேயே தங்கி, ஒருவேளை உணவு மட்டும் உண்டு, தங்கள் 6 நாள் விரதத்தை தொடங்கினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 29-ம் தேதி மாலை நடைபெறுகிறது. அதன்பின் கடலில் நீராடி தங்கள் உண்ணாவிரதத்தை பக்தர்கள் நிறைவு செய்வர்.

விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) ரா.ஞானசேகர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT