வழக்கறிஞர்களின் தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பால் நீதித்துறைப் பணிகள் பாதிக்கப்படவில்லை. 90 சதவீத பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கருத்து தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன்
ஆகியோர் முன்பு வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி நேற்று ஒரு முறையீடு செய்தார். ‘‘நீதி மன்றத்துக்கு பணிக்கு வரும் வழக்கறிஞர்கள், பணிக்கு வராத வழக்கறிஞர்களால் மிரட்டப் படுகின்றனர். எனவே, மாவட்ட நீதிமன்றம் அடங்கிய உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) பாதுகாப்புக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று அவர் கூறினார்.
அப்போது, அங்கிருந்த மூத்த வழக்கறிஞர்கள் சிலர், ‘‘வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி சுய விளம்பரத்துக்காக இவ்வாறு முறையிடுகிறார். கீழ் நீதிமன்றங்களில் பணிக்குச் செல்பவர்களை யாரும் தடுக்கவும் இல்லை, மிரட்டவும் இல்லை’’ என்றனர்.
இதுசம்பந்தமாக தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்படிதான் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஒரு வார்த்தைகூட கூட்டவோ, குறைக்கவோ இல்லை.
இதில் வழக்கறிஞர்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தால், உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.வழக்கறிஞர்களின் தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பால் நீதித்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை. 90 சதவீத பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வழக்கறிஞர்கள் போராட்டத்தால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
உயர் நீதிமன்ற வளாகத்தை உயர் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால், தற்போதுள்ள சிஐஎஸ்எப் பாதுகாப்புக்கு போதிய நிதிஒதுக்கீடு செய்வதிலேயே பிரச்சினைகள் உள்ளது.
இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.
முறையீடு செய்த வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, ஐ.டி. பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் ராம்குமாரின் அனுமதியின்றி அவருக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்து, பிறகு பின்வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.