ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி சென்னை கோயம் பேட்டில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப் படுகின்றன.
தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிமுகவினர் நேற்று 9-வது நாளாக உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர்.
பல இடங்களில் அதிமுகவினர் மொட்டையடித்து கருப்புச்சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். கோயில்களில் சிறப்பு பூஜை, பிரார்த்தனையும் செய்யப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக கோயம்பேட்டில் உள்ள மொத்த மற்றும் சில்லறை காய்கறிக் கடைகள், பூ மார்க்கெட், பழ மார்க்கெட் அனைத்தும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பேச்சாளர்கள் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர்.