கூவத்தூர் சொகுசு விடுதிகளில் கடந்த 10 நாட்களாக தங்கியிருக்கும் அனைத்து பேரவை உறுப்பினர்களையும் அவரவர் தொகுதிக்கு சென்று பணியைச் செய்ய உத்தரவிடக் கோரிய மனுவில், உரிய அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த ஆணழகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
"தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக சந்திரபிரபா தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, வி,கே.சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் சந்திரபிரபா உள்ளிட்ட 129 சட்டபேரவை உறுப்பினர்கள், சென்னை கூவத்தூரில் இருக்கும் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் பேரவை உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். ஆனால் எம்எல்ஏக்கள் தங்களது கடமையை உணராமல் தனியார் விடுதியில் உள்ளனர்.
எனவே ஸ்ரீவில்லிப்புத்தூர் பேரவை தொகுதியில் உறுப்பினர் சந்திர பிரபா உள்பட தனியார் விடுதியில் இருக்கும் அனைத்து பேரவை உறுப்பினர்களையும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில், அவரவர் சட்டமன்ற தொகுதிகளில் சென்று பணியாற்ற உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிடும்போது, பேரவை உறுப்பினர்கள் அவரவர் தொகுதிக்கு செல்லாமல் சொகுசு விடுதியில் உள்ளனர். தொகுதி எம்எல்ஏக்களை சந்தித்து குறைகளை தெரிவிக்க வழி தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "தமிழகத்தில் தான் இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. எம்எல்ஏக்கள் மக்கள் பணி செய்யாமல் இருப்பதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் சொகுசு விடுதிக்கு செல்வதற்கு முன்பாக மக்கள் பணிகளை முறையாக செய்தார்களா?" என்றனர்.
பின்னர் மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மனுவில் குறிப்பிட்டு எதிர்மனுதாரர்களான தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிஜிபி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சந்திரபிரபா எம்எல்ஏ ஆகியோருக்கு உத்தரவிட முடியாது. உரிய எதிர்மனுதாரர்களை சேர்க்க வேண்டும். முறையான எதிர்மனுதாரர்களை சேர்த்து மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை மார்ச் 14-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக எம்எல்ஏ சந்திரபிரபாவை கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆனழகன் உயர் நீதிமன்ற கிளையில் ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஜெ.நிஷாபானு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.