சமஸ்கிருத மொழி பேசுவதற்கான இலவச வகுப்புகளை சமஸ்கிருத பாரதி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக சமஸ்கிருத பாரதி அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
சமஸ்கிருத பாரதி அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு சமூக நல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு மதுரை, திருப்பூர், ராஜ பாளையம் உள்ளிட்ட ஊர்களில் தனது கிளையை கொண்டுள்ளது. இந்த அமைப்பு ஆன்மீக மற்றும் அறிவியல் தத்துவங்களை கொண்ட சமஸ்கிருத மொழியை இன்றைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக சமஸ்கிருத மொழி பேச்சு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள் சென்னை தி.நகர் பர்கிட் சாலையிலுள்ள சாரதா வித்யாலயா பள்ளியில் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்புகள் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரையும் நடத்தப்படுகின்றன.இந்த வகுப்பு களில் சேர வயது தடையில்லை. இதற்காக சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.