மதுவிலக்கு கோரி போராடிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய தமிழக அரசு கூடுதல் டி.எஸ்.பி. பாண்டியராஜனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுவிலக்குக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலைக்கு அருகில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும் என ஆணையிட்டது. இந்த உத்தரவால் தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3300 மதுக்கடைகளை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த 3300 கடைகளை முழுவதுமாக அகற்றுவதற்குப் பதிலாக நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. தமிழக அரசின் இந்த செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டையில் இருந்து கருமத்தம்பட்டி செல்கின்ற மாநில நெடுஞ்சாலையில் சாமளாபுரத்தில் இருந்த மதுக்கடை மூடப்பட்டது. ஆனால் சாமளாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் மதுக்கடையைத் திறக்க அரசு சார்பில் முயற்சி எடுக்கப்பட்டது.
மதுக்கடையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் உட்பட அனைத்து மக்களும் ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை மதுக்கடைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்தியுள்ளது. இதையும் தாண்டி காவல்துறை கூடுதல் டி.எஸ்.பி. பாண்டியராஜன், பெண்கள் என்றும் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
காவல்துறையில் இதுபோன்ற காட்டுமிராண்டிகளும் உள்ளது வருத்தமளிக்கிறது. தமிழக அரசு கூடுதல் டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், விசாரணை முடியும் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.