தமிழர்கள் அறிவார்ந்த சமூகமாக மாற வேண்டும் என பேராசிரியர் பக்தவத்சல பாரதி வலியுறுத்தினார்.
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பேராசிரியர் பக்தவத்சலபாரதியின் ‘இலங்கையில் சிங்களவர்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரை மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பா.ஆனந்தகுமார் வரவேற்றார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை நூலை வெளியிட, மண்டல தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் க.பசும்பொன் பெற்றுக்கொண்டார்.
பேராசிரியர் பக்தவத்சலபாரதி பேசியது: இந்திய துணை கண்டத்தில் நாகரிக மோதல் உருவாகியுள்ளது. திராவிட நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் மத்திய அரசின் உதவியுடன் சரஸ்வதி நாகரிகமாக பல வடநாட்டு அறிஞர்களால் எழுதப்பட்டு நிறுவப்பட்டு வருகிறது.
ஆனால் ஐரோப்பிய அறிஞர்கள் 10 பேரின் ஆய்வால் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை நிறுவியுள்ளோம். இதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ் சமூகம் அறிவார்ந்த சமூகமாக மாற வேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம்.
இலங்கையில் சிங்கள இனவாதம் என்பது அரசியல் மட்டத்தில் உள்ளது. சிங்கள பாமர மக்கள் தமிழர்களை இனரீதியாக வெறுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் பேசியது: உண்மையை எழுதுவது என்பது பக்குவப்பட்ட விஷயம். சமூக, வரலாறு ஈழத் தமிழர்களுக்கு தெரியவில்லை. இலங்கையில் தமிழ் சமூகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது” என்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை தலைவர் டி.தருமராஜ், காந்திகிராம கிராமிய பல்கலைக் கழக பேராசிரியர் சுந்தர்காளி, வழக்கறிஞர் லஜபதிராய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.