தமிழகம்

தென்னக நதிகளை இணைக்க கொ.ம.தே.க. வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அரசியல் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த மாநாடு நடந்தது.

தீர்மானங்கள்:

நாடு முழுவதும் நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னால், தென்னிந்திய நதிகளை இணைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 வயதிற்கு மேலான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தை, கேரளாவைப் போல் விவசாயப் பணிக்கு, பணியாளர்களை ஈடுபடுத்த அரசு செயல்படுத்த வேண்டும்.

மதுரையைப் போல் கோவையிலும், உயர்நீதிமன்றக் கிளை தொடங்க வேண்டும். கேரளா அட்டப்பாடி தமிழக விவசாயிகளை, கேரள அரசின் சட்டத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களை விவசாய நிலங்களில் பதிப்பதை நிறுத்திவிட்டு, தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்வதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சாயக்கழிவு பிரச்சினையை தீர்க்க அரசு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தி, விவசாயத்தையும், ஜவுளித் தொழிலையும், பாதுகாத்து நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.

கொங்கு நாட்டின் நீர்

பாசான திட்டங்களான அவிநாசி -அத்திக்கடவு, ஆனைமலை - நல்லாறு, பாண்டியாறு - புன்னம்புழா, திருமனி முத்தாறு, ஒகேனக்கல் - வசிஷ்டநதி, தோனிமடுவு திட்டம் ஆகிய நீர் பாசானத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

பொள்ளாச்சி, ஆத்தூர்-கள்ளக் குறிச்சி உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்.

அவிநாசி, தாராபுரம், அரூர் போன்ற தனித் தொகுதிகளை, பொதுத்தொகுதிகளாக மாற்ற வேண்டும். விசைத்தறி தொழிலை காப்பாற்ற தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை ஆர். தேவராஜன் தலைமை வகித்தார். செம்பியன் சிவக்குமார், முத்துராமசாமி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பி.ஆர்.டி.சென்னியப்பன், ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT