தமிழகம்

சட்டப்பேரவையில் எமர்ஜென்சியை விட கெடுபிடி அதிகம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

செய்திப்பிரிவு

தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியே இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள்இதனால் எமர்ஜென்சியை விட கெடுபிடி அதிகமாக உள்ளது என மதுரை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பில் ‘‘சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’’ என்ற தலைப்பில் நேற்று இரவு பழங்காநத்தத்தில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி தலைமை வகித்தார். மாநில துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, எமஎல்ஏ-க்கள் பழனிவேல் தியாகராஜன், அர.சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

பேரவை த்தலைவர் என்பதற்கு அடையாளமாக பண்பாளராக இருந்தவர் திமுகவை சேர்ந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன். எப்படியிருக்கக்கூடாது என்பதற்கு அடையாளமாக தற்போது இருப்பவர் தனபால். மக்களுக்கு தேவைப்படக்கூடிய வசதிகள், அவர்கள் பிரச்சினைகளை பற்றி சுதந்திரமாக எம்எல்ஏ-க்கள் சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் குரல் வளையை சபாநாயகர் நெரிக்கிறார். ஆனால், அவர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக நடுநிலைமையுடன் செயல்படும் ‘தி இந்து’ பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

கவர்னர் உரையில் திமுக எம்எல்ஏக்கள் முழுமையாக பங்கேற்று எதிர்கட்சி கடமையை ஆற்றினோம். எதிர்கட்சி தலைவர் என்கிற முறையில் நான் நிறைய பேசினேன். நிதி நிலை அறிக்கையிலும் நாங்கள் முழுமையாக விவாதத்தில் பங்கேற்றோம். எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் நிறைவுயாற்றினார். மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிற நேரத்தில் திமுகவை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் 2 பேர் பங்கேற்கிற வாய்ப்பு கிடைத்தது. இதை முழுமையாக பயன்படுத்தி விவாதத்தில் பங்கேற்றோம்.

ஆளும்கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம்.

சட்டமன்றத்தில் நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எங்களை சபையை விட்டு வெளியேற்றுவதிலே ஆளும்கட்சியினர் குறியாக இருக்கின்றனர். அதனால், திட்டமிட்டே கோபப்படுத்தி சில வார்த்தைகளை சொல்வார்கள். உதாரணமாக அதிமுக எம்எல்ஏ செம்மலை, சட்டமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதியை முரண்பாட்டின் மொத்த உருவம் என்றார். இதை பார்த்துவிட்டு நாங்கள் சும்மா நிற்க முடியாமா?. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றோம்.

அதில் என்ன தவறு. நடுநிலையோடு இருக்கவேண்டிய சபாநாயகர், ஏதோ நாங்கள் கலகத்தை ஏற்படுத்தியதாக கூறி திட்டமிட்டு திமுக வினர் மீது நடவடிக்கை எடுத்தார்.

அதுபோல் ஆகஸ்ட் 17ம் தேதி நமக்கு நாமே பற்றி பிரச்சனை வந்தது. ஆளும்கட்சி உறுப்பினர் மானிய கோரிக்கை விவாதத்தில் நமக்கு நாமே சுற்றுப்பயணம் பற்றி என்னை ஒருமையில் விமர்சித்தார். அப்போது திமுக உறுப்பினர் எழுந்து எதிர்ப்பு குரல் கொடுத்தனர். ஆளும்கட்சி உறுப்பினரின் பேச்சை நீக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சபாநாயகர் நீக்க மறுத்தார். அதனால், திமுகவினர் முதல்வரை ஒருமையில் பேசவா எனக்கேட்டனர். அதற்கு பிறகு நான் வேகமாக சட்டமன்றத்திற்கு வந்து நானும் ஆளும்கட்சி உறப்பினரின் பேச்சை பற்றி கேட்டேன். திமுகவினரை சமாதானப்படுத்தி உட்கார வைத்து அமைதிப்படுத்தினேன். 10 நிமிடம் கழிந்து அவை முன்னவர் ஓபிஎஸ், திமுகவினரை சீண்டும் வகையில் பேசினார். உடேன அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் எடுத்த எடுப்பிலே எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் திமுக உறுப்பினர் அத்தனைப்பேரையும் வெளியேற்றுகிறேன் என்றார். நான் முடியாது என்றேன், என்னை அவைக்காவலர்கள் தூக்கிசென்று வரண்டாவில் போட்டனர்.

அப்போது திமுகவினருக்கு கோபம் வந்தது. அப்போது நான் அவர்கள் கடமையை அவர்கள் செய்கின்றனர் என திமுக உறுப்பினர்களை சமாதானம் செய்தேன்.

அப்போது என்னை தூக்கிய காவலர் ஒருவர், என் காதில் உங்களை தூக்குவது என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியம், ’ என பெருமை என்றார். அது வலது பக்கமாக, இடது பக்கமாக என சொல்ல மாட்டேன். நான் அதை சொன்னால் அந்த காவலர் வேலை போய்விடும்.

திமுகவினர் கேள்விகளை அதிமுக அமைச்சர்களால் எதிர் கொள்ள முடியவில்லை என்கிற கோபம் ஜெயலலிதாவுக்கே இருக்கிறது. அதை சட்டமன்றத்தில் அவரால் வெளிகாட்டிக் கொள்ள முடியவில்லை. திமுக தலைவர் கருணாநிதியை விமர்சிப்பதையே ஜெயலலிதா தனது பலமாக கருதுகிறார். சட்டமன்றத்தி்ல் ஒரு உறுப்பினரை பேச அனுமதிப்பது சபாநாயகரின் கடமை. ஆனால், அவரோ எதிர்கட்சியினரை வெளியேற்றுவதும், நடவடிக்கை எடுப்பதுமே மட்டுமே அவரது வேலையாக கருதுகிறார்.

எதிர்கட்சித்தலைவரை சட்டமன்றத்தை விட்டு தூக்கிவீசுவது சட்டமன்றத்திற்கே அவமானம். இதில் ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சி என்றால் எத்தனை முறை வேண்டுமென்றாலும் நான் அந்த அவமானத்தை தாங்க தயார். மக்கள் பிரச்சனைகளை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்ல முடியவில்லையே என்ற வேதனை எனக்கு ஏற்பட்டது. அதனாலே மக்களைத்தேடி வந்து மக்கள் மன்றத்தில் வந்து சட்டமன்றத்தில் நடந்த உண்மையை தெளிவுப்படுத்துகிறேன்.

காவல் துறைமானிய கோரிக்கையில் எங்களை பங்கேற்க விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு சதி செய்து அவசரம் அவசரமாக எங்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்துள்ளனர். நாங்கள் எந்த கலவரத்திலும் ஈடுபட வில்லை. கோரிக்கைதான் வைத்துக் கொண்டு இருந்தோம். இதற்கு நடவடிக்கையா?. எமர்ஜென்சியை விட சட்டமன்றத்தில் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. எதிர்கட்சிகளே சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என நினைக்கிறார்கள். எதிர்கட்சியே இல்லாத வெற்று மைதானத்தில் முதலைமச்சரும், அமைச்சர்களும் பேசுகிறார்கள். எதிர்கட்சியில்லாத சட்டமன்றம் கோமா நிலையில் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்க்கட்சியினரை கண்டு பயம்

திமுக துணைப்பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி பேசுகையில், இன்று(நேற்று) மதுரைக்கு ஸ்டாலின் வந்த விமானத்தி்ல்தான் அமைச்சர் பன்னீர் செல்வம் வருவதாக அவருக்கு டிக்கெட் போட்டிருந்தனர். ஸ்டாலி்ன் இந்த விமானத்தில் வருவதாக தெரிந்ததும் பன்னீர் செல்வம் உடனடியாக தனது டிக்கெட்டை ரத்து செய்தார். எதிர்கட்சியினரை பார்த்தாலே பதவி காலியாகிவிடும் என்ற அச்சத்தில் இன்று அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் சுதந்தரமாக செயல்பட முடியவில்லை என்றார்.

SCROLL FOR NEXT