தமிழகம்

கரூர் அன்புநாதன் வீட்டில் ரூ.5 கோடி சிக்கிய விவகாரம்: நத்தம் விஸ்வநாதன், மகன், மைத்துனரிடம் வருமான வரி அதிகாரிகள் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அவரது மகன், மைத்துனர் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் நத்தம் விஸ்வநாதன். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேம்பார்பட்டி கிராமத்தில் உள்ள அவரது பங்களா, அலுவலகம், உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், நத்தத்தில் உள்ள கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள விஸ்வநாதன் வீடு ஆகிய இடங்களில் கடந்த 12-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கரூரில் அன்புநாதன் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5 கோடி சிக்கியது. இந்தப் பணம் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமானது என்பது, தற்போது வருமான வரித்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விஸ்வநாதன், அவரது மகன் அமர்நாத் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.200 கோடி வர்த்தகம்

இந்நிலையில், ஹாங்காங்குக்கு ரூ.200 கோடி பண வர்த்தகம் செய்தது தொடர்பாக நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர்நாத், மைத்துனர் ஆகியோரிடம் சென்னை எம்ஆர்சி நகரில் ஒரு ஹோட்டலில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்து விஸ்வநாதன் உட்பட 3 பேரும் கைது செய்யப்பட்டதாகவும் நேற்று மாலை தகவல் பரவியது.

இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.ஆனால், தான் கைது செய்யப்படவில்லை என்று விஸ்வநாதன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் உள்ள எனது மகளின் வீட்டில்தான் இருக்கிறேன். வருமான வரித்துறை அதிகாரிகள் என்னிடம் விசாரணை மட்டுமே நடத்தினர். நான் கைது செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் பொய்யானவை’’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT