குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“மத்திய மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஒடிஸா, வடக்கு ஆந்திர கடற்கரையையொட்டிய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்யும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக தஞ்சாவூரில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வலங்கை மான், குடவாசல், சிதம்பரம், விருத்தாசலம், திருவாரூர், பாபநாசம், நீடாமங்கலம், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.