உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் மீது காரை ஏற்றி கொல்ல முன்றதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் வட்டம் திருப்புலிவனம் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் முருகன். இக்கிராமத்தில் சுப்பையா என்பவர் 60 ஏக்கருக்கும் அதிகமான அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு முருகன் ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்தார். அதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்த விவரங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பையாவின் மகன் முருகப்பன், நேற்று கிராம நிர்வாக அலுவலர் முருகன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது, அவர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றுள்ளார். அப்போது முருகன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அதற்குள் அவரைச் சுற்றி ஊர் பொதுமக்கள் சூழ்ந்ததால், முருகப்பன் காரில் வேகமாக ஓட்டிச் சென்று தப்பிவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் முருகன் அளித்த புகாரின் பேரில் உத்திரமேரூர் காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.