தமிழகத்தில் மின்சிக்கனத்தை கட்டாயமாக்கும் சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று மின் ஆய்வுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மின் ஆய்வுத் துறை சார்பில், தேசிய எரிசக்தி சேமிப்பு வார விழா மதுரை யில் சனிக்கிழமை நடை பெற்றது. விழாவை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். மதுரை மண்டல மின் ஆய்வாளர் பெ.பழனி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அரசுத் தலைமை மின் ஆய்வுத் துறைப் பொறியாளர் சு.அப்பாவு பேசியதாவது:
மின்சாரம் பல வகைகளில் மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. ஆனால், மின் உற்பத்திக்காக நாம் பயன்படுத்தும் மரபு சார்ந்த எரிபொருள்கள் 100 ஆண்டுகளில் காலியாகும் சூழல் உள்ளது. இந்த பூமியில் இன்னும் நூறு ஆண்டுக்கான நிலக்கரிதான் உள்ளது. இதேபோல, 60 ஆண்டுக்கான இயற்கை எரிவாயு, 130 ஆண்டுக்கான யுரேனியம்தான் இருக்கின்றன. எனவே, மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
இந்தியாவில் ஒரு தனி மனிதன் ஆண்டுக்கு 400 மெட்ரிக் டன் எரிபொருளை செலவழிக்கிறான். ஆனால், அமெரிக்காவிலோ ஓராண்டுக்கான தனி மனித எரி பொருள் செலவு 2400 மெட்ரிக் டன்னாக உள்ளது. நாடு வளர வளர எரிபொருள் தேவை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், சிக்கன மாகப் பயன்படுத்த முடியும்.
தமிழகத்தில் ஓராண்டுக்கு 72 பில்லியன் யூனிட் மின்சாரம் செலவி டப்படுகிறது. மின்சிக்கனத்தைக் கடைப்பிடித்தால், விவசாயத்தில் 3 பில்லியன் யூனிட்டையும், வீடுகளில் 2.6 பில்லியன் யூனிட்டையும், தொழிற்சாலைகளில் 1.9 பில்லியன் யூனிட் மின்சாரத்தையும், வர்த்தக, அலுவலக மின்சாரத்தில் 0.2 பில்லி யன் மின்சாரத்தையும் சேமிக்க முடியும். அதாவது, ஆண்டுக்கு 7.7 பில்லி யன் யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும். இது 1200 மெகா வாட் மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு சமம்.
எரிசக்தி திறன் ஊக்க செயல் சட்டம் என்ற புதிய சட்டம்
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் இதுவரை நடை முறைப்படுத்தப்படவில்லை. ஆனால், இச்சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இச்சட்டத்தில், கட்டாயப்படுத்தி மின்சிக்கனத்தை செயல்படுத்துதல், தானாக முன்வந்து மின்சிக்கனத்தை கடைப்பிடித்தல் என இரண்டு ஷரத்துக்கள் உள்ளன.
இச்சட்டத்தின்படிதான், ப்ளோரோ சென்ட் டியூப் லைட்கள், ஏ.சி., பிரிட்ஜ் போன்ற 4 பொருள்களில் தரக்குறியீடு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து டி.வி., வாஷிங் மெஷின், சீலிங் பேன் உள்ளிட்ட 14 வீட்டு உபயோகப் பொருள்களுக்கும் தர நிர்ணயம் கட்டாயப்படுத்தப்பட உள்ளது.
அதேபோல, கட்டடங்கள் கட்டும்போது, மின்சிக்கனத்துக்கு உதவும் மின்சாதனங்களைப் பொருத்தினால் மட்டுமே, அதற்கு அனுமதி வழங்க இச்சட்டத்தில் இடம் உள்ளது. இரும்பு, தெர்மல், டெக்ஸ்டைல் உள்ளிட்ட 9 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள 41 நிறுவனங்களைக் கண்டறிந்து, வருகிற 2015-ம் ஆண்டுக்குள் மின்சிக்கனத்தில் குறிப்பிட்ட இலக்கை கட்டாயம் எட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட உள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து எரிபொருள் சிக்கனம் குறித்த கருத்தரங்கில் தியாகராசர் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் வி.சரவணன், செட்டி நாடு சிமெண்ட் கூடுதல் பொது மேலாளர் எல்.வி.செந்தில்குமார் ஆகியோர் பேசினர். தலைமை கணக்கர் எஸ்.அழகுதுரை நன்றி கூறினார்.