சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். புதிய குடும்ப அட்டை கோரியும், முகவரி மாற்றம், பெயர் நீக்கல், சேர்த்தல் மனுக்களை வழங்கியவர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:
குடும்ப அட்டை கேட்டு விண்ணப் பிப்பவர்கள் கூட்டுக் குடும்பத்தில் தனி சமையலறையுடன் கூடிய வீட்டில் வசித்தால், தேவையான ஆவணங்கள் அடிப்படையில் உரிய விசாரணைக்குப் பின் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும். சென்னை மாநகரப் பகுதியில் 17 மண்டல அலுவலகங்களில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 667 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் 2 வது சனிக்கிழமை களில் நடத்தப்படும் முகாம்களில் 3,165 மனுக்கள் பெறப்பட்டு 2,648 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த குறைதீர் முகாம்களில் இதுவரை 5 லட்சத்து 9 ஆயிரத்து 184 மனுக்கள் பெறப்பட்டு, 5 லட்சத்து 8 ஆயிரத்து 412 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டு களில் சென்னையில் மட்டும் 128 முழு நேரக்கடைகள், 2 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் திறக்கப் பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் குறைகளை, உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் செயல்படும் 044-28592828 என்ற தொலைபேசி எண், ‘consumer@nic.in’ என்ற மின்னஞ்சல், ‘www.consumer.tn.gov.in’ என்ற இணையதள முகவரியை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உணவுத்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ், உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் சூ.கோபாலகிருஷ்ணன், நுகர் பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் கா.பாலச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.