தீபா பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த நாஞ்சில் சம்பத்தைக் கண்டித்து தீபா ஆதரவாளர்கள் நேற்று காலை தியாகராய நகர் சிவானந்தம் தெரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனை சந்தித்த பின்னர் பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், தீபாவை தரக்குறைவாக விமர்சனம் செய்தார். இது தீபா ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று காலை தியாகராய நகர் சிவானந்தம் தெருவில் உள்ள தீபா வீட்டு முன்பு அவரது தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் தீபாவுக்கு ஆதரவாகவும், நாஞ்சில் சம்பத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
தீபாவை தரக்குறைவாக விமர்சனம் செய்த நாஞ்சில் சம்பத்தைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாம்பலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, மறியலில் ஈடுபட்ட தீபா ஆதரவாளர்கள் 70 பேரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.