மத்திய அரசின் தொகுப்பில் உள்ள கூடங்குளம் போன்றவற்றிலிருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரத்தை கேட்டுப்பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவுவதால் பொதுமக்களுக்கு மின்சாரத்தின் பயன்பாடு அதிக அளவில் தேவைப்படுகிறது. தமிழகத்தில் தற்போது உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்வதன் மூலம் 17 ஆயிரம் மெகா வாட்டுக்கும் மேல் மின்சாரம் கிடைக்கிறது என்று தமிழக அரசு தெரிவிக்கிறது.
ஆனால், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. தொடர் மின்தடையால் குழந்தைகள், நோயாளிகள் பெரும் இன்னலுக்கு உட்படுகிறார்கள். எனவே, தமிழகத்தில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு தனியார் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து குறைந்த விலைக்கு மின்சாரத்தை வாங்கவும், மத்திய அரசின் தொகுப்பில் உள்ள கூடங்குளம் போன்றவற்றிலிருந்து கூடுதல் மின்சாரத்தை தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும்.
முக்கியமாக தமிழ்நாடு மின்வாரியம் மின்கசிவைப் போக்குவதற்கும், மின்சாரம் செல்லும் பாதைகளை பராமரிக்கவும், மின் திருட்டை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.