தமிழகம்

அதிக மழையால் விவசாயம் பாதிக்காமல் இருக்க மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு தனி வேளாண் காலநிலை அறிவிப்பு: மத்திய வானிலை ஆய்வு மையத்திடம் வலியுறுத்த திட்டம்

செய்திப்பிரிவு

இந்திய வானிலை ஆய்வுத்துறையின், காலநிலை ஆய்வு பிரிவும், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் காலநிலை மையமும் இணைந்து விவசாயத்துக்கு பயன்படும் காலநிலை முன்னறிவிப்புகள் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கத்தை நேற்று நடத்தின.

வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆய்வு மையத் தலைவர் எஸ்.பன்னீர்செல்வம் வரவேற்றார். சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் எஸ்.பி.தம்பி பேசினார்.

தொலைமுறைக் கல்வி மைய இயக்குநர் எச்.பிலிப், பயிர் மேலாண்மைத்துறை இயக்குநர் சி.ஜெயந்தி ஆகியோர் விவசாயத்துக்கு காலநிலை முன்னறிவிப்புகளின் அவசியம் குறித்து பேசினர். இதில் தமிழகம், புதுச்சேரியிலிருந்து ஏராளமான விவசாயிகள், வானிலை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் எஸ்.பி.தம்பி கூறும்போது, ‘விவசாயத்திலும் பயிர் மேலாண்மையிலும் காலநிலைகளின் பங்கு அவசியமானது. காலநிலைப்படி பயிர் செய்வது என்பது லாபகரமான விவசாயத்துக்கும் அடிப்படையாக இருக்கும். காலநிலை அறிவிப்புகளையும், எச்சரிக்கைகளையும் முன்கூட்டியே காலநிலை ஆய்வு மையங்கள் கணித்துவிடுவதால், அதைப் பெற்று, அந்தந்த பகுதி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் இயற்கை பேரிடர்களிலிருந்து விவசாயத்தை பாதுகாக்க முடியும்’ என்றார்.

இக்கருத்தரங்கில், ஆடுதுறை, சென்னை, கோவை, கன்னிவாடி, காரைக்கால், கோவில்பட்டி, நாமக்கல், உதகை, பேச்சிப்பாறை ஆகிய வேளாண் காலநிலை ஆய்வு மையத்தினர், தங்களது சேவைகள் குறித்து விளக்கமளித்தனர்.

கோவை வேளாண் பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆய்வு மைய அதிகாரிகள் பேசும்போது, ‘கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 39 வட்டாங்களில் 6 லட்சம் ஹெக்டேர் விவசாயப் பரப்புக்கு பயன்படும் வகையில், வேளாண் காலநிலை முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறோம்.

இப்பகுதியில் அதிகளவில் விளையும் தானியப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் இந்த காலநிலை முன்னறிவிப்பால் நல்ல பலனை பெறுகின்றன. சுமார் 67 வருட காலநிலைப் பதிவுகளை ஒப்பிட்டு அதற்கேற்ப முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்குகிறோம். அதேபோல, எம்கிஷான் இணையதளம் மூலம் 65 ஆயிரம் விவசாயிகளுக்கு இத் தகவல்களை, குறுஞ்செய்திகளாக வழங்குகிறோம். முன்கூட்டியே வழங்கப்படும் இந்த தகவல்களால், நீர்ப்பாசனம், நடவு உள்ளிட்டவற்றில் விவசாயிகளின் செலவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக ரூ.14 ஆயிரம் வரை செலவு குறைகிறது. இதுதவிர 32 மாவட்டங்களுக்குமான காலநிலை வரலாற்றுப் பதிவுகளை தொகுக்கப்பட்டுள்ளன’ என்றார்.

மேலும் அவர்கள் கூறும்போது, ‘கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 2 விதமான மழைப்பொழிவுகள் உள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியை உள்ளிடக்கிய வால்பாறை அதிக மழைப்பொழிவு கிடைக்கும் இடமாக உள்ளது. எனவே பொதுவான வேளாண் காலநிலை அறிவிப்புகள் இங்கு பயன்படுவதில்லை. இதனால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேச விவசாயிகளுக்கு தனியான வேளாண் காலநிலை அறிவிப்புகள் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளன. இந்த கோரிக்கையை மத்திய வானிலை ஆய்வு மையத்துக்கு அனுப்பி, அத்திட்டம் செயல்படுத்தப்படும்’ என்றனர்.

SCROLL FOR NEXT