தமிழக வனப் பகுதிக்குள் கேரள வேட்டைக் கும்பல்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவக் குணம் என்ற பெயரில் வன விலங்குகளை வேட்டையாடும் இவர்கள் பணம் சம்பாதிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
தமிழக வனத் துறைப் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதும் ஒரு காரணம் என்ற புகாரும் உள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை கிளன்ராக் பகுதியில் வேட்டைக் கும்பல் ஒன்று கைதாகியது. அவர்களிடமிருந்து மலைப்பாம்பு இறைச்சி, உடும்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
உடும்பு, காட்டெருமை, பாம்பு ஆகியவற்றுக்கு மருத்துவக் குணம் உள்ளது என சிலர் பரப்பும் விஷம வதந்தியால் கேரளாவில் அவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. ‘மூட்டு வலிக்கு காட்டெருமை கறி மிகவும் நல்லது’ எனக் கூறி பெரும் தொகைக்கு இவற்றின் இறைச்சி விற்கப்படுகிறது. இதற்காக, வேட்டைக் கும்பல் தமிழக வனப் பகுதிகளை குறிவைக்கிறது. தமிழக வனப்பகுதியினுள் ஊடுருவும் இந்தக் கும்பல் வன விலங்குகளை வேட்டையாடுகிறது. இதில் ஊர்ஜிதமானதுதான் பந்தலூரில் கைதான வேட்டைக் கும்பல்.
தமிழகத்தில் வனப் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதால், வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருவதாக தமிழக பசுமை இயக்கச் செயலாளர் ஜெயசந்திரன் கூறுகிறார்.
‘மருத்துவக் குணம் நிறைந்தது எனக் கூறி பாம்பு, உடும்பு ஆகியவற்றையும் வேட்டைகாரர்கள் விட்டுவைப்பதில்லை.
கடந்த காலங்களில் மான், முயல், காடை, காட்டுக்கோழி ஆகியவற்றை வேட்டையாடி வந்தனர். இந்த நிலை மாறி தற்போது மருத்துவக் குணம் நிறைந்தது எனக் கூறி காட்டெருமை, புலி, உடும்பு, பாம்பு ஆகியவற்றை வேட்டையாடத் துவங்கியுள்ளனர். இது சர்வதேச அளவில் நடக்கும் வியாபாரமாகிவிட்டது.
தமிழக வனப் பகுதியில் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதால் வேட்டை அதிகரித்து வருகிறது’ என்கிறார் ஜெயச்சந்திரன்.
உளவியல் மாற்றம் காரணம்?
இது ஒருபுறமிருக்க, உளவியல் மாற்றத்தால் புதுமையான விஷயங்களை மனிதன் நாடுவதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள். பெயரிட விரும்பாத மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘மனிதன் அன்றாடம் செய்யும் பணிகளை, தொடர்ந்து செய்தால் மனச் சோர்வு ஏற்படும். இதனால், புதிய விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கிறது. உளவியல் மாற்றத்தால்தான் தற்போது நமது கலாச்சாரத்தைக் கைவிட்டு பிற கலாச்சாரங்களை தற்போதைய தலைமுறையினர் கடைப்பிடிக்கின்றனர். இதே நிலைதான் உணவுப் பழக்கத்திலும் ஏற்பட்டு காட்டெருமை, மான், பாம்பு ஆகிய இறைச்சிகளை நாடுகின்றனர். இதைப் பயன்படுத்தி சிலர் வேட்டையாடி லாபம் பார்க்கின்றனர்,’ என்றார்.
கடந்த 2008-ம் ஆண்டு நீலகிரி வடக்கு வனக்கோட்டம் சிங்காரா சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானையை வேட்டையாடிய கும்பல், அதன் இறைச்சியை சமைத்து உண்டது நினைவுக்கூரத்தக்கது.