தமிழகம்

சொத்து தகராறில் தந்தையை சுட்டுக் கொன்ற மகன் கைது

செய்திப்பிரிவு

தருமபுரி அருகே சொத்து தகரா றில் விவசாயியை சுட்டுக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி நகலூரைச் சேர்ந்தவர் விவசாயி குள்ளப்பன் (65). இவரது மனைவி ஆராயி (எ) பாஞ்சாலி. இவர் களுக்கு கண்ணன் (35) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் கண்ணன் அருகில் உள்ள வெங்கடசமுத்திரத்தில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

குள்ளப்பனுக்கு 18 ஏக்கர் நிலம் உள்ளது. சொத்தில் தனது பங்கை பிரித்துத் தருமாறு கண்ணன், குள்ளப்பனிடம் கேட்டு வந்தார். ஆனால், சொத்தைப் பிரிக்க குள்ளப்பன் மறுத்துவிட்டார். இதனால், தந்தை, மகன் இடையே தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், அருகில் உள்ள கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோயில் விழாவில் பங்கேற்க கண்ணன், மனைவி, குழந்தைகளுடன் இருளப்பட்டி நகலூருக்கு வந்திருந்தார்.

குள்ளப்பன் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் உள்ள கொட்டகையில் உறங்கச் சென்றார். ஆராயி, மகன் கண்ணன் உள்ளிட்டோர் கோயில் விழாவில் பங்கேற்கச் சென்றுவிட்டனர்.

இதனிடையே நேற்று காலை வெகு நேரமாகியும் குள்ளப்பன் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த ஆராயி தோட்டத்துக்கு சென்றார். அங்கு கட்டிலில், குள்ளப்பன் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரூர் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து ஏ.பள்ளிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சொத்து தகராறில் குள்ளப்பனை, அவரது மகன் கண்ணன் துப்பாக்கி யால் சுட்டுக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கண்ணனை கைது செய்த போலீ ஸார், அவரிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT